Published : 21 Oct 2018 09:16 AM
Last Updated : 21 Oct 2018 09:16 AM

திரை விமர்சனம் - சண்டக்கோழி 2

தேனியைச் சுற்றியுள்ள 7 ஊர்களுக்கு பொதுவான வேட்டைக் கருப்பன் கோயில் திருவிழா, இரு குடும்பங்கள் இடையிலான மோதல் காரணமாக 7 ஆண்டு களாக தடைபட்டிருக்கிறது. அந்த மோதலில் இறந்தவரின் மனைவியான வரலட்சுமி சரத் குமாரும், குடும்பத்தின் ஆண்களும் எதிராளி குடும்பத்தின் அனைத்து ஆண்களையும் கொல்கிறார்கள். அந்தக் குடும்பத்தின் கடைசி ஆண் வாரிசான ஜான் ஹரியை கொல்ல காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், ஊர் திருவிழாவை அமைதியாக நடத்தி முடிப்ப தாக உறுதியேற்கிறார் அப்பகுதியில் செல் வாக்காக இருக்கும் ராஜ்கிரண். திருவிழாவின் போது, ஹரியை கொல்ல திட்டமிடுகிறது வரலட்சுமி தரப்பு. அவரைக் காப்பாற்றுவதாக ராஜ்கிரண் வாக்களிக்கிறார். வெளிநாட்டில் படிக்கும் அவரது மகன் விஷால் அவருக்கு துணையாக களமிறங்குகிறார். திருவிழா நல்லபடியாக நடந்ததா? ஹரி காப்பாற்றப்பட்டாரா என்பதே மீதிக் கதை.

2005-ல் வெளியாகி வெற்றிபெற்ற ‘சண்டக் கோழி’ படத்தின் 2-ம் பாகத்தை 13 ஆண்டு களுக்குப் பிறகு தந்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. கதையைப் பொருத்தவரை, இதை முதல் பாகத்தின் தொடர்ச்சி என்று கூற முடியாது. அதே தலைப்பு, கதாபாத்திரங் களைப் பயன்படுத்தி வேறொரு கதையை உருவாக்கியுள்ளனர். ஊர்த் திருவிழா, வில்லி கதாபாத்திரம், சாதி வன்முறை ஆகியவற்றை சேர்த்து புதுமை காட்ட முயற்சித்துள்ளனர். புகை, மது காட்சிகள் வைக்காமல் இருந்ததற்காக இயக்குநரின் அக்கறை, பொறுப்புணர்வை வரவேற்கலாம்.

முதல் பாகத்தில், சூழ்நிலையால் அடிதடி யில் இறங்கும் விஷால் இப்படத்தின் தொடக் கத்திலேயே சூப்பர் ஹீரோவாக அறிமுகமாகி றார். பரபரப்பான ஆக்சன் காட்சிகள், ராஜ்கிரண் - விஷால் இடையிலான பாசம், டிரைவராக வரும் ராமதாஸின் நகைச்சுவை, விஷால் - கீர்த்தி சுரேஷ் கெமிஸ்ட்ரி, திருவிழா காட்சிகள் என பார்வையாளரை சோர்வடைய வைக்காமல் படம் நகர்கிறது. இடைவேளையில் கொடுக்கப்படும் அதிர்ச்சி யும், தொடர்ந்து விஷால் எடுக்கும் அதிரடி களும் சுவாரசியம் கூட்டுகின்றன. பல சண் டைக் காட்சிகளைக் கடந்து வன்முறைக்கு எதிரான மெஸேஜுடன் படம் நிறைவடை கிறது.

வரலட்சுமியின் மகனாக வரும் சிறுவனைக் கூட கொலைவெறி கொண்டவனாக சித்தரித் திருப்பது ஜீரணிக்க முடியாதது. ராஜ்கிரணும், விஷாலும் ஊர் மக்களால் கடவுளுக்கு இணையாகப் போற்றப்படுவதும், கிளைமாக் ஸில் வரலட்சுமியின் குங்குமம் மழைநீரால் அழிவதுபோல காண்பிப்பதும் இந்த கால கட்டத்துக்கு பொருந்தாத விஷயங்கள்.

விஷால் முதல் பாகத்தில் இருந்தது போலவே இருக்கிறார். சென்டிமென்ட் காட்சி களில் முதிர்ச்சியான நடிப்பைத் தருகிறார். கீர்த்தி சுரேஷிடம் காதலில் விழுவது, டிரைவர் என்று நம்பும்படியாக நடிப்பது, அப்பா வுக்கு முன் சவடால் பேசியவரை ஒரே அடி யில் சாய்ப்பது, அப்பாவின் வாக்கை நிறை வேற்ற பொறுமை காப்பது, பழிவாங்கு வதிலும் அன்பைக் கையாள்வது என தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

ராஜ்கிரண் வழக்கம்போல மிடுக்கான தோற்றம், கண்ணியமான நடிப்பால் கவர்கிறார். இவர்களது சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

வாத்தியார் மகள் செம்பருத்தியாக கீர்த்தி சுரேஷுக்கு வாய் வலிக்கப் பேசும் கதாபாத்தி ரம். நாயகனைக் காதலிப்பது மட்டுமே அவ ரது ஒரே வேலை. அதை ரசிக்கத்தக்க வகை யில் செய்தாலும், ஒருசில இடங்களில் அவ ரது துடுக்குத்தனம் சலிப்பை ஏற்படுத்துகிறது.

பழிவாங்கும் வன்மத்தை சுமந்து திரியும் பெண் வேடத்துக்கு வரலட்சுமி கச்சிதமாக பொருந்துகிறார்.

மு.ராமசாமி, சண்முகராஜன், தென்னவன், கஜராஜ், கஞ்சா கருப்பு, ஹரீஷ் பெராடி, அர்ஜய், ஞானசம்பந்தன், மயில்சாமி, முனீஸ் காந்த் என்று ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தும், அவர்கள் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு இல்லை.

‘‘இது ஆடு புலி ஆட்டம் இல்லை; ஆடும் புலியும் சேர்ந்து ஆடுற ஆட்டம்’’, ‘‘அருவாள பார்த்தா ஆடு பயப்படும்; அய்யனாரு பயப்படு வாரா’’, ‘‘செய்றதுன்னா சொல்றது இல்லை.. செய்றது’’, ‘‘திருவிழாவுல புலி வேஷம் போட லாம்; ஆனா புலிக்கு முன்னாடியே வேஷம் போடக்கூடாது’’ என எஸ்.ராமகிருஷ்ணன், பிருந்தா சாரதியின் வசனங்கள் படத்துக்கு வலுசேர்க்கின்றன.

‘‘இன்னைக்கும் இந்த அருவா பிடிக்குற தெம்பு இருந்தா, வாடா.. வந்து வெட்டுடா. இங்கேதான்டா இருப்பேன், இந்த மண்லதான்டா இருப்பேன்’’ என்று விஷால் சவால் விடுவதே முதல் பாகத்தின் கிளைமாக்ஸ். இப்படத்தின் தொடர்ச்சியை அங்கிருந்து தொடங்கியிருக்கலாம். அப்படி ஒரு முக்கிய காட்சியை தவற விட்டுள்ளனர்.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ‘கம்பம் பொண்ணு’ பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசை சிறப்பு. கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவில் தேனி பகுதியின் வெக்கையை யும், புழுதிக் காற்றையும் உணர முடிகிறது. திருவிழாக் காட்சிகளில் கலை இயக்குநரின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. சண் டைப் பயிற்சியாளரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.

ஹரியைக் காப்பாற்றுவது, திருவிழாவை தடையின்றி நடத்தி முடிப்பது மட்டுமே திரைக் கதைக்கான முடிச்சுகளாக இருப்பதால் சுவாரசியமும், விறுவிறுப்பும் ஒருகட்டத்தில் குறையத் தொடங்குகிறது. வேட்டைக் கருப்புக்கு அஞ்சாதவர்கள் 7 ஆண்டுகளாக ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? ஹரியின் கழுத்தில் துண்டுபோடும் அர்ஜய் அப்போதே அவரை பழிவாங்காதது ஏன்? கலெக்டரான பிறகும் ஹரி அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. புதுமையாக ஏதும் இல்லாவிட்டாலும், காதல், ஆக்சன், சென்டிமென்ட், நகைச்சுவை என்று ஒரு கமர்ஷியல் கலவையாக ஓரளவு திருப்திப்படுத்துகிறது ‘சண்டக்கோழி 2’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x