

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தை பொங்கல் 2015ல் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அஜித், அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை தயாரித்து வருகிறார் ஏ.எம்.ரத்னம்.
தற்போது சென்னை, ஈ.சி.ஆர் சாலையில் அஜித் பங்குபெறும் சண்டைக் காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். அஜித், த்ரிஷா இருவரும் கணவன், மனைவியாக நடித்து வருகிறார்கள். மலையாளப் படமான ‘ஐந்து சுந்தரிகள்’ படத்தில் நடித்ததற்காக மாநில விருது பெற்ற அனிகா, அஜித்திற்கு மகளாக நடிக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு குறித்து எதுவும் வெளியிட அவசரப்பட வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கும் படக்குழு, முதலில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கலாம் என்ற தீர்மானித்தில் இருக்கிறது.
சென்னையில் தொடங்கியிருக்கும் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 40 நாட்களுக்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். மொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதி கட்டப் பணிகள் முடிந்து படம் வெளிவர கண்டிப்பாக பொங்கல் ஆகிவிடும் என்கிறது படக்குழு.
பொங்கல் 2014ல் 'வீரம்' கிராமத்து பாத்திரத்தில் ஆக்ஷன், வசனங்கள் என களமிறங்கிய அஜித்தை, இப்படத்தில் அப்படியே வித்தியாசமாக பார்க்க இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.