

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் ‘காற்றின் மொழி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
திருமணத்திற்குப் பிறகு ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பினார் ஜோதிகா. அதற்குப் பிறகு ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ ஆகிய படங்களின் நடித்தார். தற்போது அவரது நடிப்பில் ‘செக்க சிவந்த வானம்’ மற்றும் ‘காற்றின் மொழி’ ஆகிய படங்கள் உருவாகியுள்ளது.
இதில் ‘காற்றின் மொழி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சுதந்திரத் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டார் சூர்யா. இதற்குச் சமூகவலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்பு, சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக் இது. வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு, எந்த இடைவெளியும் இன்றி மொத்தப் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ஏ.எச்.ஹாசிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்தப் படம், அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 18-ம் தேதி ஜோதிகாவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.