

‘சலங்கை ஒலி’ படத்துடன் ‘லக்ஷ்மி’யை ஒப்பிட வேண்டாம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபுதேவா பேசினார்.
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லக்ஷ்மி’. பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி தித்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகவுள்ளது. ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.
’லக்ஷ்மி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. அச்சந்திப்பில் பிரபுதேவா பேசியதாவது:
முதலில் விஜய் ஒரு டான்ஸ் படம் எடுக்க ஐடியா இருக்கிறது என்று சொன்னார். நாம் எடுத்தால் ‘தேவி’ போல ஒரு படம் எடுக்க வேண்டும் இல்லைன்னா எடுக்க கூடாது என்று சொன்னேன். ’இல்லை. டான்ஸ் படம் எடுக்கலாம்’ என்று பேசி ஒப்புக் கொள்ள வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள நடனக் கலைஞர்களை தேர்வு செய்தார்.
விஜய் மிகவும் நல்லவர் அதனால் தான் எனக்கும் அவருக்கும் செட் ஆகிறது. இந்த படத்துக்கு பிறகு ‘தேவி 2’ படத்திலும் இணைய உள்ளோம். ஐஸ்வர்யா அமைதியான பொண்ணு. ‘நீங்கள் நல்ல டான்சர். நடிப்புக்கும் கொடுக்கும் முக்கியவத்தை நடனத்துக்கும் கொடுக்க வேண்டும் என்று அவரிடம் அடிக்கடி சொல்வேன். கடைசியில் நம்ம படத்திலேயே டான்ஸ் இல்லாமல் போய்விட்டது.
இப்படத்தில் நடித்திருக்கும் குழந்தைகள் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நான் 4,5 டேக் வாங்கினாலும் குழந்தைகள் குறிப்பாக தித்யா முழு டான்ஸையும் ஆடி முடித்து தான் நிறுத்துவார். ‘சலங்கை ஒலி’ என்ற டான்ஸ் படம் இதற்கு முன்பு வெளிவந்திருக்கிறது. அது வேற லெவல். அதனோடு இதை ஒப்பிட வேண்டாம்
இவ்வாறு பிரபுதேவா பேசினார்.