

‘பியார் பிரேமா காதல்’ படத்தைக் கலாச்சாரச் சீரழிவு என்றும் கூறலாம் என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
யுவன் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பியார் பிரேமா காதல்’. இளன் இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைஸா, முனீஸ்காந்த், ஆனந்த்பாபு, ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேற்று (ஆகஸ்ட் 10) வெளியாகியுள்ள இப்படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
யுவன் முதல் தயாரிப்பில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளார். முதல் பட இயக்குநர் இளன் தன் வசனத்தின் மூலம் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் சுவராஸ்யப் படுத்தியுள்ளார். இப்படத்தின் மிகப்பெரிய பலம் யுவனின் இசை. இரண்டாவது ஹரிஷ் கல்யாணின் யதார்த்தமான நடிப்பு.
முனீஸ்காந்தின் டயலாக் டெலிவரி, (அப்புறம் அடுத்தகட்டக் காட்சிகள்) இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். ஆனந்த்பாபு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படியும் ஒரு கலாச்சாரம், காதல் இருப்பதையும், இளன் கடைசி 20 நிமிடங்களில் அதில் இருக்கும் உணர்வுகளையும் தெளிவாகப் பதிவு பண்ணியுள்ளார். இந்தத் திரைப்படத்தைக் கலாச்சாரச் சீரழிவு என்றும் கூறலாம். இப்படியொரு கலாச்சாரக் காதல் நடைமுறையில் இருக்கிறது என்று வாதம் செய்யலாம். ஒட்டுமொத்தத்தில் அனைவரும் சேர்ந்து ஒரு வெற்றிப்படத்தை ரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தந்துள்ளனர்.
இவ்வாறு சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார்.