“கடைசி அரசியல் தலைவர் கலைஞர்” - இளையராஜா

“கடைசி அரசியல் தலைவர் கலைஞர்” - இளையராஜா
Updated on
1 min read

‘கடைசி அரசியல் தலைவர் கலைஞர்’ என இளையராஜா தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு மறைந்தார். அவருடைய உடல், அண்ணா சமாதி அருகில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. ஏராளமான பிரபலங்களும், பொது மக்களும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். நேற்று வரமுடியாதவர்கள் கூட அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ‘கடைசி அரசியல் தலைவர் கலைஞர்’ என இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழ்ப் பெருங்குடி மக்களே... நமக்கெல்லாம் துக்க தினமாக  ஆகிவிட்டது. டாக்டர் கலைஞர் அய்யா மறைந்தது நமக்கெல்லாம் துக்க தினமே தான். இந்த துக்கத்தை எப்படி நாம் மாற்றிக்கொள்ளப் போகிறோம், எப்படி நாம் திரும்பி வரப்போகிறோம் என்பது தெரியவில்லை.

அரசியல் தலைவர்களிலேயே கடைசி அரசியல் தலைவர் அய்யா கலைஞர். சினிமாத்துறையில் சுத்தமானத் தமிழ் வசனங்களை அள்ளி அள்ளி வழங்கிய கடைசி வசனகர்த்தா கலைஞர் என்று சொல்லுகின்ற அளவுக்கு அய்யா எழுதியிருக்கின்றார். அரசியலாகட்டும், கலையாகட்டும், இலக்கியமாகட்டும், தமிழாகட்டும், எல்லாத் துறைகளிலும் தலைசிறந்து விளங்கிய கலைஞரின் இழப்பு, நமக்கெல்லாம் ஈடுசெய்ய முடியாத இழப்பு.

உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாத இழப்பென்றால், அது கலைஞரின் இழப்புதான். இந்த தினத்தில், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக எனது இசைக்குழுவினருடன் ஆஸ்திரேலியா வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி ஆறு மாதங்களுக்கு முன்னாடியே திட்டமிட்ட நிகழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in