‘கும்கி 2’ படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு: நாயகி இன்னும் முடிவாகவில்லை

‘கும்கி 2’ படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு: நாயகி இன்னும் முடிவாகவில்லை
Updated on
1 min read

‘கும்கி 2’ படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. மேலும், நாயகி இன்னும் முடிவாகவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘கும்கி’. அப்படத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் பிரபு சாலமன்.

’கும்கி 2’ நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். வில்லனாக ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி, சூசன், ‘கோலங்கள்’ திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடித்து வருகிறார்கள். முக்கியக் கதாபாத்திரத்தில் ‘உன்னிகிருஷ்ணன்’ என்ற யானை நடித்து வருகிறது.

இப்படத்தின் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியது. ஆனால், இன்னும் நாயகி முடிவாகவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

’கும்கி 2’ படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, படத்தொகுப்பாளராகப் புவன், கலை இயக்குநராகத் தென்னரசு, சண்டைக்காட்சிகளை ஸ்டன்ட் சிவா ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.

இப்படம் குறித்து இயக்குநர் பிரபு சாலமன் கூறுகையில், “மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் நடித்த ‘இதயக்கனி’ படப்பிடிப்பிற்குப் பிறகு ‘கும்கி 2’ படப்பிடிப்பு தான் இங்கு நடைபெற்றிருக்கிறது.

இப்படத்துக்காக இரண்டு விஷயங்களில் சிரமப்பட்டோம். ஒன்று யானை. அது கிடைத்து விட்டது. மற்றொன்று படத்தின் நாயகி. அது இன்னும் முடிவாகவில்லை. கதைக்கு சரியான நாயகியைத் தேடிக்கொண்டிருக்கிறோம். தற்போது  நாயகி இல்லாத காட்சிகளை மட்டுமே படமாக்கி வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in