

விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் என்னை கடுமையாக உழைக்க வைப்பதாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் சாய் அபயங்கர். அவருடைய இசையமைப்பில் முதல் படமாக ‘டியூட்’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘கருப்பு’, ‘மார்ஷல்’, ‘அட்லி இயக்கி வரும் படம்’, ‘பாலாஜி தரணீதரன் – விஜய் சேதுபதி படம்’, ‘தனுஷ் படம்’, ‘சிம்பு – ‘பார்க்கிங்’ இயக்குநர் படம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் சாய் அபயங்கர்.
இதனிடையே இவருடைய வளர்ச்சி, பாடல்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார் சாய் அபயங்கர். இது தொடர்பாக பேட்டியொன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அப்பேட்டியில் சாய் அபயங்கர், “சமூக வலைதளத்தில் நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறேன் என்பது தெரியும். நிச்சயமாக யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம், அது அவர்களுடைய சுதந்திரம். ஆனால், தொடர்ச்சியாக இசையின் மூலம் என்னை நிரூபித்துக் கொண்டே இருப்பேன்.
விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் என்னை கடினமாக உழைக்க வைக்கிறது. ‘பல்டி’ மற்றும் ‘டியூட்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அடுத்தடுத்து வரக்கூடிய படங்களிலும் என்னை நிரூபித்துக் கொண்டே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார் சாய் அபயங்கர். அடுத்து இவரது இசையில் சூர்யா நடித்து வரும் ‘கருப்பு’ வெளியாகவுள்ளது.