

இந்த பிக்பாஸ் சீசனின் அதிக கன்டென்ட் கொடுத்த போட்டியாளர்களில் ஒருவரான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் வெளியேற்றம் யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது.
போன வாரம் பிரவீனின் வெளியேற்றம் ஆடியன்ஸுக்கு ஏமாற்றம் தந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அவர் மிக ஆக்டிவ் ஆன போட்டியாளராகவும், டாஸ்க்குகளில் தொடர்ந்து முனைப்புடன் ஆடக் கூடியவராகவும் இருந்தார். வெளியேறும்போது அவருடைய அழுகை காண்பவரையும் கலங்கச் செய்வதாக இருந்தது. இந்த வாரமும் யாருமே எதிர்பார்க்காத வகையில் வாட்டர்மெலன் திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனால், இது ஆடியன்ஸுக்கு எந்தவித அதிர்ச்சியையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை.
காரணம், இவருடைய ஆட்டமே தனி ரகமாக இருந்தது. ரீல்ஸ் மூலம் பிரபலமாகி இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர் உள்ளேயும் அதை மட்டுமே அதிகளவில் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு கேமராவாகப் போய் நடித்துக் காட்டுவது மட்டுமே அவருடைய பிரதான வேலையாக இருந்தது. கடைசி வாரத்தில் அந்த கேமராக்களே கடுப்பாகி முகத்தை திருப்பிக் கொண்டதையும் பார்க்க முடிந்தது.
இன்னொன்று பார்வதியுடன் சேர்ந்து அவர் மற்றவர்களிடம் நடந்து கொண்ட விதம் ஏற்றுக் கொள்ளவே முடியாதது. குறிப்பாக கடைசி சில நாட்களில், ஆரோரா சாதாரணமாக அட்டையை அடுக்கியதை, ‘ஆபாசம்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டி எவ்வளவு டேமேஜ் செய்ய முடியுமோ அவ்வளவு டேமேஜ் செய்ய முயன்றார். ஆனால் வார இறுதியில் முதல் வேளையாக அந்த அபத்தமான குற்றச்சாட்டை சுக்குநூறாக உடைத்தார் விஜய் சேதுபதி.
திவாகரிடம் இருந்த இன்னொரு பெரிய சிக்கல், தன்னிடம் சாதாரணமாக ஒரு பிரச்சினை குறித்து பேச வருபவர்களை வார்த்தைகளால் காயப்படுத்துவதையும், அவர்களை பார்த்து ‘மரியாதை கெட்டுவிடும்’ என்று சொல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார். ‘என்னிடம் பேச உனக்கு தகுதி / தராதரம்’ இல்லை என்று திவாகர் சொல்லாத ஆளே இந்த சீசனில் இல்லை என்னும் அளவுக்கு ஒவ்வொரு முறையும் போட்டியாளர்கள் தாண்டி விஜய் சேதுபதியே கண்டித்த பிறகும் தொடர்ந்து அந்த வார்த்தைகளை பயன்படுத்தி வந்தார்.
மற்றொன்று 24 மணி நேர ஒளிபரப்பில் ஒருமுறை திவ்யா தன்னிடம் திவாகர் மறைமுகமாக சில கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்ததாக குறிப்பிட்டார். அதாவது ‘மதுரையில் நீங்கள் எந்த பகுதி’, ‘நீங்களும் நானும் சொந்தக்காரர்களாக இருக்க வாய்ப்புள்ளது’ போன்ற கேள்விகளை கேட்டது குறித்து திவ்யா கண்டிப்புடன் அதனை திவாகரிடமே தெரிவித்தார். நாகரிகம் கருதி அந்தக் காட்சிகள் தினசரி எபிசோடில் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
‘கானா’ வினோத்தையும் அவர் தொடர்ந்து அநாகரிகமான வார்த்தைகளால், மட்டம் தட்டும் முறையில் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாக இருந்தது. கடந்த வாரம் நடந்த ‘ராஜா ராணி’ டாஸ்க்கின் போது ‘மியூட்’ போடும் அளவுக்கு தகாத வார்த்தை ஒன்றை சொல்லி திட்டினார். இதற்கு முக்கியமான காரணம் வினோத் தான். சும்மா இருக்கும் திவாகரை தொடர்ந்து வம்பிழுத்துக் கொண்டே இருப்பதையும் அவர் விடவில்லை.
எனினும் பார்வதியுடன் சேர்ந்து தொடர்ந்து ப்ரோமோக்களில் இடம்பிடித்தவர் திவாகர் மட்டுமே. என்னதான் ஓட்டுக்கள் அடிப்படையில் எவிக்ஷன் என்றாலும் கூட, சேனல் நிர்வாகத்தை பொறுத்தவரை தங்களுக்கு யாரால் அதிக கன்டென்ட் கிடைக்கிறது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகாரபூர்வமற்ற ஓட்டுப் பட்டியலிலும் கூட திவாகர் கீழே இல்லை. சுபிக்ஷா, ரம்யாவை விட அதிக ஓட்டுகளே வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
எனினும் இதையெல்லாம் தாண்டி திவாகர் வெளியேற்றப்பட்டதற்கு காரணம், அவருடைய நடவடிக்கை, அவர் விடும் வார்த்தைகளுமாகத்தான் இருந்திருக்க வேண்டும். திவாகரின் இந்த வெளியேற்றம், வார இறுதியில் கிடைக்கும் கைதட்டல்கள் நமக்கு எந்த பலனும் தராது, அதிக ஓட்டு வாங்கினாலும் நாகரிகமாக நடந்து கொண்டால்தான் போட்டியில் நீடிக்க முடியும் என்ற எச்சரிக்கை உணர்வை மற்ற போட்டியாளர்களுக்கு கொடுத்திருக்க வாய்ப்புள்ளது.
முதல் வாரத்தில் இருந்தே திவாகரை வைத்து கன்டென்ட் தேற்றிக் கொண்டிருந்த பார்வதி, கானா வினோத் போன்ற போட்டியாளர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் பிக்பாஸ் பார்வையாளர்களின் முக்கிய கேள்வியாக இருக்கிறது.