

தமிழ்த் திரையுலகில் 30 வருடங்களாகப் படங்களைத் தயாரித்து வருவதுடன், ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் வெளிவரவும் உதவிவரும் பட நிறுவனம் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.செயின் ராஜ் ஜெயினின் மிஸ்ரி எண்டர்பிரைசஸ். செயின் ராஜின் மகனான ரஜினி கிஷன் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள மூன்றாவது படம் ‘ரஜினி கேங்’.
‘கனா காணும் காலங்கள்’ இணையத் தொடர் மூலம் புகழ்பெற்ற ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலகலப்பான ஹாரர் நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இதில் ரஜினி கிஷன் ஜோடியாக தீவிகா வருகிறார். மேலும் முனீஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன் உள்பட முன்னணி நகைச்சுவை நடிகர்களின் பட்டாளம் நடித்துள்ளது.
சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை, ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் திரண்டு வந்து வாழ்த்தினர். ‘ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளும் காதலர்கள் சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள்தான் படம்’ என்கிறார் இயக்குநர்.