எல்லோருக்கும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்: இசை வெளியீட்டு விழாவில் சூரி நெகிழ்ச்சி

எல்லோருக்கும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்: இசை வெளியீட்டு விழாவில் சூரி நெகிழ்ச்சி
Updated on
2 min read

என்னைக் கைப்பிடித்து அழைத் துச்செல்லும் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டவனாக இருப் பேன் என்று ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி கூறியுள்ளார்.

விமல், ப்ரியா ஆனந்த், சூரி நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கியுள்ள ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடந் தது. தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், இயக்குநர் சங்கத்தலைவர் விக்ரமன், இயக்குநர் மனோபாலா, இசையமைப்பாளர் டி.இமான், நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர் கள் கலந்து கொண்டனர்.

கலகலப்பு

இந்நிகழ்ச்சியில் நடிகர் விமல் பேசியதாவது:

“இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எப்படி பேசுவது என்று சூரியிடம் யோசனை கேட்டேன். ‘ப்ளாங்கா போய் மைக் முன்னாடி நில்லுப்பா... அதுவா வந்து கொட்டும்’ என்றார். நாம எப்பவுமே ப்ளாங்கா நின்னு கிட்டுத்தானே வர்றோம்னு நினைச் சுக்கிட்டேன். இந்தப் படத்தில் ப்ரியா ஆனந்தோட சேட்டை ரொம்பவே அதிகம். ஒரு காட்சியில் நானும் சூரியும் ப்ரியாவோட கையை பிடித்து இழுத்துக்கிட்டு ஓடணும்னு இயக்குநர் சொன்னார். நாங்க முந்தறதுக்குள்ள இந்த பொண்ணு என் கையை பிடிச்சிட்டு ஓடத் தொடங்கிடுச்சு. இயக்குநரோ, ‘யார் பிடித்து இழுத்துக்கிட்டு போனா என்ன? மொத்தத்தில் ஊரை விட்டு ஓடணும் அவ்ளோதான்’னு சொல்லிட்டார். இப்படி மொத்த படப்பிடிப்பும் கலகலப்பா இருந்துச்சு.”

இவ்வாறு அவர் பேசினார்.

சிவகார்த்திகேயன் பேசும்போது, ‘‘எங்க போனாலும் ‘ஊதா கலரு ரிப்பன் மாமா’ன்னு குழந்தைகள் கூப்பிடறாங்க. அப்படி ஒரு பேரை வாங்கிக்கொடுத்தவர் இசையமைப் பாளர் டி.இமான்.” என்றார்.

ஒன்றாக அறிமுகம்

விஜய்சேதுபதி பேசும்போது, “கூத்துப்பட்டறையில் நான் அக்கவுண்டன்டாக இருந்தபோது அங்கு விமல் நடிகராக இருந்தவர். அவரோட ஹிட் பட வரிசையில் இந்தப் படமும் இருக்கும். சூரிக்கு இன்று பிறந்தநாள். நாங்கள் இருவரும் ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் ஒன்றாக அறிமுகமானோம். அதுல எனக்கு சின்ன ரோல். அவனுக்கு பெரிய ரோல். அதுக்கு பிறகு ‘நான் மகான் அல்ல’ படத்திலும் நாங்கள் சேர்ந்து நடிச்சோம். அப்போ அவன் பெரிய ஸ்டாரா வந்துட்டான். இனி அவன் எப்படி பழகுவானோன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அவன் மாறலை. இன்னைக்கும் பழைய சூரியாவே இருக்கான். இந்த இரண்டு ராஜாக்களுக்கும் வாழ்த்துகள்’’ என்றார்.

நன்றிக்கடன்

நடிகர் சூரி பேசும்போது, ‘‘இங்கே என்னை ‘நடன சூறாவளி’ன்னு சிலர் சொன்னாங்க. இந்தப் படத்துல நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் நடிக்க நான் பட்ட பாடு எனக்கு மட்டும்தான் தெரியும். இந்தப் படத்தில் விமல் எனக்கு இன்னொரு ராஜாவா பதவி கொடுத்து அழகு பார்க்க ஆசைப்பட்டார். இயக்குநர் கண்ணனும் ராஜாவாக்கிவிட்டார். எல்லோருக்கும் இந்த மனது வராது. இருவருக்கும் நன்றி. இன்று எனக்கு பிறந்த நாள். இப்படி ஒரு உயரத்தை நான் எட்டுவதற்கு காரணம் அண்ணன் சுசீந்திரன்தான். இன்னைக்கு பல இயக்குநர்கள் என்னை கைப்பிடித்து அழைத்துப் போகிறீர்கள். எல்லோருக்கும் நன்றிக்கடன் பட்டவனாக இருப் பேன்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in