

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள் என்று அஜித் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அஜித் அளித்த பேட்டியொன்றில் கரூர் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். அதில் கரூர் விவகாரத்துக்கு ஒருவர் மட்டுமே காரணமல்ல, அதற்கு அனைவருமே பொறுப்பு என்று குறிப்பிட்டு இருந்தார் அஜித். அந்தப் பேட்டியை விஜய்க்கு எதிராக அஜித் பேசியிருப்பதாக இணையத்தில் பலரும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இதனை மறுக்கும் வகையில் விளக்கமளித்து பேட்டியொன்று அளித்துள்ளார் அஜித். அப்பேட்டியில் அஜித், “நான் இதற்கு முன்பு அளித்த பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிக்கிறார்கள். எப்போதுமே விஜய்க்கு நல்லது செய்ய விரும்புகிறேன். எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள். கரூரில் நடந்தது ஒரு துரதிர்ஷடவசமான சம்பவம். இதற்கு முன்பு ஆந்திராவில் திரையரங்கம், பெங்களூரு கிரிக்கெட் விழா போன்றவற்றிலும், பல நாடுகளிலும் இது போன்று நடந்துள்ளது.
மேலும், பலர் என் வம்சாவளியைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். என்னைப் பிடிக்காதவர்கள் எப்போதுமே வேற்று மொழி பேசுபவர் என்று சொல்கிறார்கள். அதே மக்கள் என்னை தமிழன் என்று ஆரவாரம் செய்யும் நாள் வரும். நான் கார் பந்தயத்தில் பெரிய சாதனை படைப்பேன். அப்போது முழு மாநிலமும், தேசமும் பெருமைப்படும். அதற்காக என் ஆன்மாவை அர்ப்பணிக்கப் போகிறேன்.
அனைவரும் உங்கள் குடும்பத்தை முதலில் கவனித்துக் கொள்ளுங்கள். என் படங்களை திரையரங்குகளில் பார்ப்பது சரி என நினைத்தால் பாருங்கள். நான் ஒருபோதும் என் படங்களைப் பார்க்க மக்களை வலியுறுத்தமாட்டேன். அதே போல் அரசியலில் வாக்கு கேட்க மாட்டேன். வாக்களிப்பதை ஒரு குடிமகனின் கடமையாகவே பார்க்கிறேன். தயவுசெய்து மோட்டார் விளையாட்டுகளை ஊக்குவியுங்கள். இப்போதும் நேர்காணல்கள் அளிப்பது அவற்றை ஊக்குவிக்க மட்டுமே. எப்போதுமே படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. ஏனென்றால் அவை மக்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.