

பரசுராம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
’கருப்பு’ படத்தினை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அதனை முடித்துவிட்டு ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இப்படத்தினை தொடர்ந்து சூர்யாவை இயக்கப் போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதற்காக பல்வேறு இயக்குநர்கள் கதைகள் கூறியிருக்கிறார்கள்.
தற்போது ’கீதா கோவிந்தம்’ இயக்குநர் பரசுராம் சூர்யாவை சந்தித்து கதையொன்று கூறியிருக்கிறார். ‘சர்காரு வாரி பாட்டா’ மற்றும் ‘தி பேமிலி ஸ்டார்’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் அடுத்த படத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழல் பரசுராமிற்கு இருக்கிறது. அவர் முதலில் கார்த்தியை சந்தித்து கதையொன்று கூறினார். ஆனால், அது அடுத்த கட்டத்துக்கு நகராத காரணத்தினால் சூர்யாவை சந்தித்து கூறியிருக்கிறார்.
சூர்யா – பரசுராம் கூட்டணி உருவானால், அப்படத்தினை தில் ராஜு தயாரிக்க முன்வந்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தக் கூட்டணி அடுத்த கட்டத்துக்கு நகர்கிறதா என்பது தெரியவரும்.