

கலாச்சாரத்தை சீரழிக்கும் படத்தை விட ஆபாச படம் எவ்வளவோ மேல் என்று இயக்குநர் பேரரசு காட்டமாக பேசியிருக்கிறார்.
ஆறுபடை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கவுள்ள இப்படத்தில் சேத்தன் சீனு, ஆஸ்னா சாவேரி, சாய் தீனா, தீபா, கராத்தே ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, “வள்ளுவன் என இந்த படத்திற்கு டைட்டில் வைத்திருக்கும் இயக்குநர் சங்கர் சாரதி ஒரு ஆன்மிகவாதி. அப்படி இருப்பதால்தான் இப்படி ஒரு துணிச்சலான டைட்டிலை அவரால் வைக்க முடிந்திருக்கிறது. வள்ளுவர் கையில் உள்ள எழுத்தாணியை எடுத்துவிட்டு கத்தியை கொடுத்திருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் திருவள்ளுவர் இருந்திருந்தால் அவர் கத்தியை அல்ல துப்பாக்கியைத்தான் எடுத்து இருப்பார். இந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் அநியாயம், அக்கிரமம்.. கொலை, வன்கொடுமை. ‘வள்ளுவன்’ என டைட்டில் வைத்ததற்கே உங்களை பாராட்டவேண்டும்.. ஏனென்றால் இப்போது இளைஞர்களுக்காக, டிரெண்டுக்காக வைக்கிறேன் என ஏதோ ஒன்றை வாந்தி எடுக்காமல் தமிழ் பற்றோடு ஒரு டைட்டிலுடன் படத்தை எடுத்திருக்கிறீர்கள்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சி மாறும்போது வேறு எதில் மாற்றம் வருகிறதோ இல்லையா பேருந்து கலர்கள் தான் உடனடியாக மாற்றப்படும். முந்தைய தலைவர்களின் பெயர்களில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் சுருக்கப்படும். வள்ளுவரை மட்டும்தான் விட்டு வைத்திருந்தார்கள்.
ஒரு ஆட்சி வந்ததும் அவர் நெற்றியில் இருந்த பட்டையை முதலில் அழித்தது. இன்னொரு ஆட்சி வந்ததும் அவருக்கு காவி கலர் வேட்டியை உடுத்தியது. அரசியல் திருவள்ளுவரையும் விட்டு வைக்கவில்லை. திருவள்ளுவர் இப்போது வந்தால் இயக்குநர் கத்தியைக் கொடுக்கத் தேவையில்லை. அவரே துப்பாக்கியைத் தூக்கி விடுவார். நாடு அப்படி இருக்கிறது.
என்னிடம் பதவி இருக்கிறது, பணம் இருக்கிறது, என்னிடம் சட்ட நுணுக்கம் இருக்கிறது, நாம் இருவரும் சேர்ந்தால் சட்டத்தையே விலைக்கு வாங்கலாம்.. ஏன் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என இந்த காலகட்டத்தில் இந்த வசனத்தை சொல்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். நீதிபதியை விமர்சித்தாலே தூக்கி உள்ளே வைத்து விடுகிறார்கள். நீதிபதி என்ன கடவுளா ? அரசனே தவறு செய்கிறான்.. ஆண்டவனே தவறு செய்கிறான்..
நான் ’சிவகாசி’ படம் எடுத்த போது வக்கீல்களை கிண்டல் செய்வதாக என் மீது தமிழ்நாட்டில் உள்ள பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் நடித்ததற்காக விஜய் மீதும், தயாரிப்பாளர் மீதும் கூட வழக்கு தொடர்ந்தார்கள். அப்படி ஒரு வக்கீலை நான் குறைவாக காட்டியதற்காக எங்கள் மூன்று பேர் மீது வழக்கு போட்டார்கள் என்றால் இப்போது இயக்குநர் சங்கர் சார்பில் இந்த படத்தில் ஒரு வக்கீல் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என்று சொல்கிறார் என்றால் உண்மையிலேயே இவர் 100 பேரரசுக்கு சமம். ஒரு இயக்குநருக்கு மக்கள் மீது அக்கறை, நாட்டுப்பற்று இருக்க வேண்டும்.
நீங்கள் ஆக்சன், காமெடி, ஃபேமிலி, சாதி, திரில்லர் என எந்த படம் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் நோக்கம் நன்றாக இருக்க வேண்டும். நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும். கலாச்சாரத்தை சீரழித்து படம் எடுப்பவர்களை விட ஆபாசப் படம் எவ்வளவோ மேல்.
பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ தொழில் இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் சங்கர் சாரதியை நான் ரொம்பவே பாராட்டுகிறேன். ஆன்மிகவாதி என்பதால் நிச்சயம் நல்ல விஷயத்தைத் தான் சொல்லுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசினார் பேரரசு.