

என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ் நடித்து, எல்.வி.பிரசாத் தெலுங்கில் இயக்கிய ‘சம்சாரம்’, வெற்றிபெற்றதை அடுத்து, அந்தப் படத்தைத் தனது ஜெமினி ஸ்டூடியோ ஊழியர்கள், அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்குத் திரையிட்டுக் காண்பித்தார், எஸ்.எஸ்.வாசன். படத்தைப் பார்த்த அவர்கள் உருகி அழுதனர்.
இதையடுத்து அந்தப் படத்தின் தமிழ், இந்தி உரிமையை வாங்கிய அவர், இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் ரீமேக் செய்தார். கதையில் தமிழுக்கு ஏற்ப சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜெமினியின் ‘சந்திரலேகா’ இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால், தமிழ் நடிகர்களை இந்திப் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பினார், வாசன். ஒரே செட், உடைகள் போன்றவை இரண்டு படங்களுக்கும் போதும் என்பதால், சிக்கனமாகப் படத்தை உருவாக்க முடிந்தது. ஆனால், பெரும்பாலான தென்னிந்திய நடிகர்களுக்கு இந்தி தெரியாது என்பதால் டப்பிங் கலைஞர்களைப் பயன்படுத்த முடிவு செய்தார்கள். இதற்காகவே, ஹாலிவுட் பாணி டப்பிங் ஸ்டூடியோவை அமைத்தார் வாசன்.
இந்திப் படத்தை எஸ்.எஸ்.வாசனும் தமிழ்ப் படத்தை சந்துருவும் இயக்கினார்கள். இந்த சந்துரு, ஜெமினி ஸ்டூடியோவில் தலைமை படத்தொகுப்பாளராக இருந்தவர். அதிக படங்களை இயக்கி இருக்க வேண்டிய இவர், ஒரு விபத்தில் இளம் வயதிலேயே உயிரிழந்தது, ஜெமினி ஸ்டூடியோவுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும் இழப்பு என்று அக்காலகட்டத்தில் கூறப்பட்டது.
இப்படத்துக்குத் தமிழில், ‘சம்சாரம்’ என்றும் இந்திக்கு ‘சன்சார்’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டது. எம்.கே.ராதா, புஷ்பவல்லி, குமாரி வனஜா, ஸ்ரீராம், சுந்தரிபாய், டி.ஆர். ராமச்சந்திரன், டி.பாலசுப்பிரமணியம், ஆர்.பாலசுப்பிரமணியம், மாஸ்டர் சேது, ரத்னபாபா ஆகியோர் நடித்தனர்.குடும்ப கதைதான். மனைவி, இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழும் ஓர் அலுவலக ஊழியருக்கு குடும்பத்துக்குள் ஏற்படும் பிரச்சினைகள் என்ன மாதிரியான சிக்கல்களைக் கொண்டு வருகின்றன என்பது கதை.
1951-ம் ஆண்டு ஆக்.19-ல் வெளியாகி வெற்றிபெற்றது இந்தப் படம். உணர்வுப்பூர்வமான கதைக்களம், எம்.கே.ராதா, புஷ்பவல்லி உள்ளிட்டோரின் சிறந்த நடிப்பு, பாடல்கள் இப்படத்துக்கு பிளஸ் ஆக இருந்தன. படத்தின் வெற்றிக்கு இசை, மற்றொரு காரணமாக இருந்தது. புகழ்பெற்ற கர்னாடக இசைக்கலைஞர் சங்கர சாஸ்திரி இசை அமைத்தார். எம்.டி.பார்த்தசாரதி மேற்பார்வையிட்டார். இதில் இடம்பெற்ற ‘சம்சாரம்... சம்சாரம்...’ என்ற பாடல் மூலம் ஏ.எம்.ராஜா பாடகராக அறிமுகமானார். ‘ஆராரோ ஆராரோ அருமை குமாரா’,‘கடகட கடகட லொட லொட வண்டி’,‘அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே’,‘ஏழை எங்கு செல்வேன்’ உள்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பை பெற்றன.
இப்படம் வெற்றிபெற்றாலும் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. படத்தின் ஒரு காட்சியில் வறுமை காரணமாகப் பெற்ற தாயே தனது குழந்தைகளைப் பிச்சை எடுக்க அனுப்புவார். அப்போது அவர்கள், ‘அம்மா பசிக்குதே’ என்ற பாடலைப் பாடி ஒவ்வொரு வீடாகச் சென்று பிச்சை எடுப்பார்கள். இக்காட்சியை ‘எந்த தாயும் தனது குழந்தைகளை, எந்த நிலையிலும் பிச்சை எடுக்க அனுமதிக்க மாட்டார்’ என்று கடுமையாக விமர்சித்து தனது பத்திரிகையில் எழுதினார் ‘கல்கி’. இதே கதையைத் தழுவி, ‘துணையிருப்பாள் மீனாட்சி’ என்ற படம் 1977-ம் ஆண்டு உருவானது. வலம்புரி சோமநாதன் இயக்கியிருந்தார். அதில், சிவகுமார், விஜயகுமார், சுஜாதா நடித்திருந்தனர்.