தமிழ் சினிமாவின் நலனுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர்: நடிகர் சங்கம் புகழாஞ்சலி

தமிழ் சினிமாவின் நலனுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர்: நடிகர் சங்கம் புகழாஞ்சலி
Updated on
1 min read

தமிழ் சினிமாவின் நலனுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர் என்று நடிகர் சங்கம் புகழாஞ்சலி செலுத்தியிருக்கிறது.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

கருணாநிதியின் மறைவு குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “முன்னாள் தமிழக முதல்வரும் தமிழ்  கலை - இலக்கிய பிதாமகனும் நடிகர் சங்கத்தின் மூத்த ஆயூட்கால உறுப்பினருமான கலைஞர் மு .கருணாநிதி மறைந்த துயர செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம், வேதனை அடைகிறோம் .

திரைக்கதை-வசன  ஆசிரியராக சினிமா பிரவேசம் நடத்தி அதன் பிறகு அரசியலுக்கு வந்து தமிழகத்தின் முதல்வராக மூன்று முறை  மக்களுக்கு தொண்டாற்றியவர். ஒரு எழுத்தாளராக சினிமாவில் அவரைப் போல் சாதித்தவர் எவரும் இல்லை. சினிமாவில் அவரது வசனங்கள் ஹீரோக்களுக்கு இணையாகப் பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது, அது  மட்டுமல்லாமல் அவர் இயற்றிய சினிமா வசனங்கள் காலங்களை வென்று வாழ்பவை. அவரது திரைக்கதைகள் ஹீரோக்களையும் உருவாக்கியது.

தான் முதல்வராக இருக்கும் போது தமிழ் சினிமாவின் நலனுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். கலை  உலகிலும் திரை உலகிலும் அரசியலிலும் அவரது அர்ப்பணிப்பு என்றும் நிலைப்பவை. அவர் இயற்றிய குறளோவியம், சங்கத்தமிழ், பூம்புகார், நெஞ்சுக்கு நீதி, தொல்காப்பியப் பூங்கா போன்ற நூல்கள் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷங்கள். அவரது  இழப்பு தமிழகத்துக்கும் திரை உலகிற்கும் மாபெரும் பேரிழப்பாகும்.

அன்னாரது மறைவால் துக்கத்தில் வாடும் குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.'' என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in