‘இட்லி கடை’ திரைப்படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட தமிழக பாஜக வலியுறுத்தல்

‘இட்லி கடை’ திரைப்படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட தமிழக பாஜக வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பண்பாடு, கலாச்சாரம், அகிம்சையை போதிக்கும் அற்புத படைப்பான ‘இட்லி கடை’ திரைப்படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட்டு காண்பிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள ‘இட்லி கடை' தமிழ் திரைப்படம் நம்முடைய சமூக, பண்பாடு, கலாச்சாரத்தின் ஆணி வேராக, நேர்மறை எண்ணங்களை விதைத்து, கலைத்திறன் மிக்க படைப்பாக, குழந்தைகள் மாணவர்கள் இளைஞர்கள் என அனைத்து வயதினரிடமும் அகிம்சையை போதிக்கும் அற்புத படைப்பாக வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகளும், போதை கலாச்சாரமும், பாலியல் சீண்டல்களும், ரத்தமும், துப்பாக்கிச் சத்தமும் அதிகரித்து மாணவர்களை, இளைஞர்களை, சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் 'இட்லி கடை' திரைப்படம் மனித நேயத்தை சொல்லித் தரும் வாழ்வியல் படமாக உருவாக்கப்பட்டுள்ளதால் இப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

நவீன காலத்தை கருத்தில் கொள்ளாமல், ஏற்றுக்கொள்ளாமல் பழமைவாதத்தைப் புகழ்ந்து பேசுகிறது என்று, இயந்திரத்தனமாக ‘இட்லி கடை’ படத்தின் கருவை, கருத்தை புரியாமல், தவறாக சிலர் பேசினாலும், படம் பார்க்கும் ஒவ்வொரு மாணவனின் இளைஞனின் ரசிகனின் மனதில் உள்ள தீய எதிர்மறை எண்ணம் கொண்ட அழுக்குகளை நீக்கி, தாய் தந்தை உறவின் புனிதம் குறித்தும், ஆன்மிக, இறை சிந்தனையின் வலிமை குறித்தும் அழுத்தமாக நம்மிடம் பதிய வைத்ததை மறுக்க முடியாது மறைக்க முடியாது.

எனவே, தமிழக அரசு நல்ல திரைப்படங்கள் எடுக்கப்படும் போது வரி விலக்கு அளிப்பதில் பாரபட்சம் காட்டக்கூடாது. நல்ல தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளித்து மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் உற்சாகப்படுத்த வேண்டும். யார் திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்? என்பதை விட நல்ல திரைப்படம் எடுக்கப்பட்டால் அந்தத் திரைப்படத்தை ஆதரிப்பது தமிழக அரசின், மக்களின் கடமை.

குடும்பங்களுக்கு மகிழ்ச்சியும், நாட்டுக்கு பெருமையும் சேர்க்கக் கூடிய அனைவருக்கும் நல்ல சிந்தனையை அளிக்கக்கூடிய அனைத்து தமிழ் திரைப்படங்களுக்கு பாகுபாடு இல்லாமல் தமிழக அரசு வரி விலக்கு அளித்து பெருமைப்படுத்தி தமிழக மக்கள் காணும் வகையில் உற்சாகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் ‘இட்லி கடை’ திரைப்படத்தைக் இலவசமாக காண தமிழக அரசு உரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in