நிஜத்திலும் ’ஜாவா சுந்தரேசன்’ ஆக மாறிய சாம்ஸ்!

நிஜத்திலும் ’ஜாவா சுந்தரேசன்’ ஆக மாறிய சாம்ஸ்!
Updated on
2 min read

’ஜாவா சுந்தரேசன்’ என தனது பெயரை மாற்றிக் கொண்டார் நடிகர் சாம்ஸ். சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான ‘அறை எண் 305-ல் கடவுள்’ படத்தில் ஜாவா சுந்தரேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாம்ஸ். இந்தக் கதாபாத்திரம் மிகவும் பிரபலம். இப்போது வரை மீம்ஸ்களில் உலவி வருகிறது. இந்த கதாபாத்திர பெயரை தனது பெயராகவே மாற்றிக் கொண்டார் சாம்ஸ்.

இது தொடர்பாக சாம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னுடைய இயற்பெயர் சுவாமிநாதன். திரைத் துறைக்கு வந்த பிறகு நான் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக எனது பெயரை "சாம்ஸ்" (CHAAMS) என்று மாற்றிக் கொண்டேன். "சாம்ஸ்" என்ற பெயரில் தான் பல வருடங்களாக பல படங்களில் நடித்து வந்துள்ளேன். ஆனால் இயக்குநர் சிம்பு தேவன் அவர்களின் இயக்கத்தில் வந்த ‘அறை எண் 305-ல் கடவுள்’படத்தில் நான் நடித்த ‘ஜாவா சுந்தரேசன்’ கதாபாத்திரம் மிகவும் புகழ் பெற்று அந்தப் பெயரை சொல்லியே ரசிகர்கள் என்னை அழைப்பதும் அதை வைத்து பல மீம்ஸ்கள் உருவாக்கி, பகிர்ந்து, பரவியதால் அந்தப் பெயர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது.

எங்கே சென்றாலும் என்னை பார்க்கும் ரசிகர்கள் "ஜாவா சுந்தரேசன்" என்று அழைப்பதோடு தங்கள் சுற்று வட்டாரத்தில் அசுர வளர்ச்சி அடைந்தவர்களை நாங்கள் "ஜாவா சுந்தரேசன்" என்று தான் அழைப்போம் என்று சொல்லி அந்தக் காட்சியில் நான் மூன்று விதமான கெட்டப்புகளில் வந்து அலப்பறை தந்தேன் என்று சிலாகித்து பாராட்டி மகிழ்கின்றனர்.

எனவே, மக்கள் விருப்பமே மகேசன் விருப்பமாக ஏற்று இன்று முதல் எனது பெயரை "ஜாவா சுந்தரேசன்" என்று மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். எனக்கு கிடைத்த இந்த பேருக்கும் புகழுக்கும் பெருமைக்கும் காரணம் "ஜாவா சுந்தரேசன்" என்ற கேரக்டரை உருவாக்கிய இயக்குனர் சிம்பு தேவன் அவர்களே. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துவிட்டு, முறைப்படி அவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவரின் வாழ்த்துக்களோடு இனி நான் "ஜாவா சுந்தரேசன்" ஆக எனது திரைப்பயணத்தை தொடர்கிறேன். இந்த நேரத்தில் "அறை எண் 305'ல் கடவுள்" படத்தை தயாரித்த பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை மீது நம்பிக்கை, காலம் வரும்போது யாரும் பெரிய உயரங்களைத் தொடலாம் என்பதற்கு அடையாளமாக அமைந்தது "ஜாவா சுந்தரேசன்" கதாபாத்திரம். மீம்ஸ்களில் தங்களது creativity-யைக் கொட்டி, என்னை "ஜாவா சுந்தரேசன்" என சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சென்றடைய வைத்த அனைத்து மீம்ஸ் படைப்பாளிகளுக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றி!

இந்த நல்ல தருணத்தில் அருமையான பல சிறந்த நகைச்சுவை கதாபாத்திரங்களை எனக்கு தந்து மக்களை மகிழ்விக்க வாய்ப்பளித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் சினிமா துறையை சார்ந்த மற்ற நண்பர்களுக்கும் உதவிய ஊடகத்துறை அன்பர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை கூறிக்கொள்கிறேன். அனைவரும் வழக்கம்போல் தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தந்து இனி என்னை "ஜாவா சுந்தரேசன்" என்றே அழைக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

A post shared by ACTOR JAVA SUNDARESAN (@actor_java_sundaresan)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in