“நெகட்டிவ் விமர்சகர்களால் பேராபத்து” - ‘மெய்யழகன்’ அனுபவம் பகிரும் இயக்குநர் பிரேம் குமார்

“நெகட்டிவ் விமர்சகர்களால் பேராபத்து” - ‘மெய்யழகன்’ அனுபவம் பகிரும் இயக்குநர் பிரேம் குமார்
Updated on
1 min read

சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில், வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்களை வெளியிடும் திரை விமர்சகர்களை கடுமையாக சாடியிருந்தார் ‘மெய்யழகன்’ இயக்குநர் பிரேம் குமார். தற்போது ‘மெய்யழகன்’ படம் வெளியாகி ஒராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதிலும் விமர்சகர்களை கடுமையாக சாடியிருக்கிறார்.

அதில் இயக்குநர் பிரேம் குமார், “பல பேர் என்னிடம் சொன்னது என்னவென்றால், ‘மெய்யழகன்’ படத்தை மலையாளத்தில் எடுத்திருக்கலாம் என்றார்கள். வெளியில் இருந்து படம் வந்தால் இங்கு தூக்கிவைத்து கொண்டாடுவர்கள், அதை நீங்கள் இங்கு செய்ததுதான் தப்பு என்றார்கள். என் மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு படத்தை, வேறு மொழியில் எடுத்தால் இங்கு கொண்டாடுவார்கள் என்றபோது ரொம்ப கஷ்டமாக இருந்தது.

இங்கு விமர்சகர்கள் சொல்லும் கருத்தினை, சாதாரண மக்களும் ஏற்றுக்கொள்ள தொடங்குகிறார்கள். திரையரங்குகளில் நாங்கள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், ஓடிடி மூலம் தப்பித்துவிட்டோம். உண்மையில் படம் சரியில்லை என்றால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அது உண்மைதானே. முன்பு பைரசி திரையுலகுக்கு ஒரு பெரிய ஆபத்தாக இருந்தது. அதைவிட பெரிய ஆபத்து இந்த மாதிரியான நெகட்டிவ் விமர்சகர்கள்தான். அவர்களை நிறுத்தவே முடியாது.

ஏனென்றால், அது மூலமாக அவர்களுக்கு வருமானம் வருகிறது. அந்த ஆண்டின் சிறந்த 10 படங்கள் பட்டியலில் முதல் 3 இடத்தில் எனது படமும் இருக்கிறது. ஒரு சமயத்தில் படம் நல்லாயில்லை என்று சொன்னவர்கள், இன்னொரு சமயத்தில் சிறந்த 10 படங்கள் பட்டியலில் நல்லாயில்லை என்று சொன்ன படமும் இருக்கிறது. அது எப்படி?” என்று வினவியுள்ளார் பிரேம் குமார்.

மேலும், “‘கொட்டுக்காளி’ என்ற படம் உலகளவில் பெயர் வாங்கிய படம். இங்கு கொண்டாடி இருக்க வேண்டும். அதோட விமர்சனங்களை எடுத்துப் பார்த்தால், சாதாரண மனிதன் கூட அப்படி விமர்சனம் பண்ண மாட்டான். ஆகையால் நீங்கள் என்ன சொல்ல வேண்டுமென்றால், அதை மக்களிடம் நேரடியாக பேச வேண்டும். விமர்சனத்தைப் பார்த்து உங்களுடைய படத்தை திரையரங்கில் மிஸ் செய்துவிட்டேன் என்று பலரும் பதிவிட்டு இருப்பதைப் பார்த்தேன். பல்வேறு படங்களைப் பார்த்து ரசித்த மக்களை, இப்போது நாங்களே சொல்றோம் அப்புறம் பாருங்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

ஒருமுறை பார்க்கலாம் என்கிறார்கள், அப்படியென்றால் என்னவென்று தெரியவில்லை. விமர்சகர்கள் இப்போது படத்திலும் நடிக்கிறார்கள், படமும் இயக்கி இருக்கிறார்கள். அது எந்த லட்சணத்தில் இருந்தது என்பதை அனைவருமே பார்த்தார்கள். விமர்சனத்தை விமர்சனமாக பண்ணுங்கள் என்றுதான் சொல்கிறேன். நெகட்டிவ் விமர்சனம் செய்தால் பார்வை அதிகரிக்கிறது என்பதற்காக நெகட்டிவை ஏற்றிக் கொண்டே செல்கிறார்கள். அப்போது எப்படி நல்ல படம் வரும்” என்று பிரேம் குமார் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in