கனமழை பாதிப்பு: லடாக்கில் சிக்கித் தவிக்கும் நடிகர் மாதவன்

கனமழை பாதிப்பு: லடாக்கில் சிக்கித் தவிக்கும் நடிகர் மாதவன்
Updated on
1 min read

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நடிகர் மாதவன் ஊர் திரும்ப முடியாமல் லடாக்கில் சிக்கியுள்ளார்.

வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், காஷ்மீரில் உள்ள லடாக் பகுதிக்கு சென்ற நடிகர் மாதவன் அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், “ஆகஸ்ட் இறுதியில், லடாக்கில் உள்ள மலை உச்சிகளில் ஏற்கனவே பனி பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக இடைவிடாத மழை காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டதால் நான் லேவில் சிக்கிக் கொண்டேன். எப்படியோ, நான் ஒவ்வொரு முறை லடாக்கில் படப்பிடிப்புக்கு வரும்போதும், இதுதான் நடக்கிறது.

கடைசியாக நான் 2008-ஆம் ஆண்டு ‘3 இடியட்ஸ்’ படப்பிடிப்புக்காக இங்கு வந்தேன். ஆகஸ்ட் மாதத்தில் திடீரென பனிப்பொழிவு ஏற்பட்டதால் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது இப்படி. ஆனால் இன்னும் வியக்க வைக்கும் அளவுக்கு அழகுடன் இந்த இடம் இருக்கிறது. இன்று வானம் தெளிவாகும், விமானங்கள் தரையிறங்க முடியும், நான் வீடு திரும்ப முடியும் என்று நம்புகிறேன்” என்று மாதவன் தெரிவித்துள்ளார்.

கனமழை பாதிப்புகளால் ஜம்மு மற்றும் கத்ரா நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் 58 ரயில்களை ரத்து செய்ய வடக்கு ரயில்வே உத்தரவிட்டது. இப்பகுதியில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் 64 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பி வழிவதாலும், திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகவும் பல முக்கிய பாலங்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தாழ்வான பகுதிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in