‘அபர்ணா சென் மீதான காதலால் வங்க மொழி கற்ற கமல்ஹாசன்...’ - மகள் ஸ்ருதிஹாசன் பகிர்வு

‘அபர்ணா சென் மீதான காதலால் வங்க மொழி கற்ற கமல்ஹாசன்...’ - மகள் ஸ்ருதிஹாசன் பகிர்வு
Updated on
1 min read

நடிகர் கமல்ஹாசன் வங்க மொழி கற்றதன் காரணம் குறித்து அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார். சத்யராஜ் உடனான உரையாடலில் இதனை அவர் கூறியுள்ளார்.

அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘கூலி’ படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் இருவரும் கலந்துரையாடினர். அப்போது ஸ்ருதிஹாசன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் பல்வேறு மொழி அறிந்தது குறித்தும், கமல்ஹாசனுக்கு வங்க மொழி அறிந்தவர் என்றும் சத்யராஜ் கூற, அதற்கு ஸ்ருதிஹாசன் பதில் அளித்தார்.

“அப்பா வங்க மொழி ஏன் கற்றுக் கொண்டார் என்றால், அப்போது அவருக்கு அபர்ணா சென் மீது காதல் இருந்தது. அவரது மனதை கவரும் வகையில் வங்க மொழியை முழுவதுமாக கற்றார். அதனால்தான் ‘ஹே ராம்’ படத்தின் ராணி முகர்ஜி கதாபாத்திரத்தின் பெயர் அபர்ணா. இப்போது நீங்கள் அதை கனெக்ட் செய்து கொள்ளலாம்” என்றார் ஸ்ருதிஹாசன்.

கமல்ஹாசன் கடந்த 1977-ல் வெளிவந்த ‘கபிதா’ என்ற வங்க மொழி படத்தில் நடித்துள்ளார். அவர் நடித்த ஒரேயொரு வங்க மொழி படம் அதுவே. தமிழில் வெளியான அவள் ஒரு தொடர்கதை படத்தின் ரீமேக் அது.

வங்க மொழி சினிமாவின் முக்கிய ஆளுமையாக அறியப்படும் அபர்ணா சென் இதுவரை 9 தேசிய விருதுகளை குவித்துள்ளார். 1981-ஆம் ஆண்டு அபர்ணா சென் முதல்முறையாக இயக்கிய ‘36 சவுரிங்கீ லேன்’ படம் இவருக்கு சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றுத் தந்தது.

சமூக பிரச்சினைகளை மிக ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் திரையில் கொண்டு வருவதில் வல்லவரான அபர்ணா சென்னுக்கு மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்துள்ளது. ‘Mr. அண்ட் Mrs. ஐயர்’, ‘தி ஜப்பானீஸ் ஒய்ஃப்’, ‘சொனாட்டா’, ‘தி ரேப்பிஸ்ட்’ ஆகியவை அபர்ணாவின் கவனித்தக்க படைப்புகளில் சில என்பது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in