மகேந்திரன் கதாசிரியராக அறிமுகமான ‘நாம் மூவர்’!

மகேந்திரன் கதாசிரியராக அறிமுகமான ‘நாம் மூவர்’!
Updated on
1 min read

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்கள், குடும்பம் மற்றும் ஆக்‌ஷன் கதைகளில் கவனம் செலுத்த, சில ஹீரோக்கள் அதோடு, காமெடியையும் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன். இவர்கள் நடித்த சில காமெடி படங்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று ‘நாம் மூவர்’. இதில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரனுடன் நாகேஷும் இணைந்து கொண்டார்.

வி.கே.ராமசாமி,எல்.விஜயலட்சுமி, ரத்னா, மலேசிய நடிகை மாதவி, பண்டரிபாய், தங்கவேலு என பலர் நடித்தனர். நாகேஷின் அம்மா பண்டரிபாய், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோரையும் வளர்க்கிறார்.

அவர் இறப்புக்குப் பிறகு மூவரும் பிரிகிறார்கள். ரவிச்சந்திரன் போலீஸ் அதிகாரியாகிறார். அவர் ரத்னாவைக் காதலிக்க, ஓவியரான நாகேஷ், மாதவியைக் காதலிக்கிறார். ஒரு நாள் ரவிச்சந்திரனை ஒரு கும்பல் கடத்துகிறது. அவரை காப்பாற்றுகிறார் ஜெய்சங்கர். பிறகு பிரிந்த மூவரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது கதை.

இயக்குநர் மகேந்திரன், கதாசிரியராக சினிமாவில் அறிமுகமான படம், இதுதான். சுப்பையா நாயுடு இசை அமைத்த இதன் பாடல்களை வாலி எழுதினார். இதில் இடம்பெற்ற ‘பிறந்த நாள் இன்று’ எனத் தொடங்கும் பாடலை, இலங்கை வானொலி அப்போது அடிக்கடி ஒலிபரப்பியது. பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் அந்தப் பாடல் இடம்பெற்றது. எம்.கர்ணன் ஒளிப்பதிவு செய்தார்.

எம்.ஜி.ஆரின் நண்பரான கே.ஆர்.பாலன், இந்தப் படத்தைத் தயாரித்தார். முதலில் பி.மாதவன் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டு நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்த காலகட்டத்தில் உருவான திரைப்படங்களைப் போல கமர்ஷியல் அம்சங்கள் ஏதுமில்லாமல், கதை யதார்த்தமாக இருந்ததால் அதை இயக்குவது கஷ்டம் என படத்தில் இருந்து விலகினார் பி.மாதவன். இதனால் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார் மகேந்திரன்.

பிறகு தயாரிப்பாளர் பாலன், அவருக்குக் கடிதம் எழுதி சென்னைக்கு வரவழைத்து, கதையில் கமர்ஷியல் விஷயங்களை அதிகமாகச் சேர்க்கச் சொன்னார். அதன்படி செய்தார் மகேந்திரன். பிறகு எடிட்டரான ஜம்பு என்கிற ஜம்புலிங்கம் படத்தை இயக்கினார்.

1966-ம் ஆண்டு இதே தேதியில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தில், ஜெய்சங்கர், நாகேஷ், ரவிச்சந்திரன் ஆகியோரின் நடிப்பு பேசப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in