மதன் பாப்... நகைச்சுவை நடிகர் மட்டும் அல்ல!

மதன் பாப்... நகைச்சுவை நடிகர் மட்டும் அல்ல!
Updated on
2 min read

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட மதன்பாப் உடல்நலக் குறைவால் காலமானார். தமிழின் தனிப் பெரும் நகைச்சுவை கலைஞராக கொடிகட்டிப் பறக்கவில்லை என்றாலும் கூட, தான் நடித்த முக்கிய கதாபாத்திரங்களின் மூலமும், தன்னுடைய சிரிப்பையே அடையாளமாக்கியும் தனி முத்திரைப் பதித்தவர் மதன் பாப்.

குறிப்பாக வடிவேலுவுடன் ‘ஃப்ரண்ட்ஸ்’, ‘கிரி’, ‘காமராசு’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்த காட்சிகள் பிரபலமாகின. மதன் பாப் என்றாலே நினைவுக்கு வருவது அவரது தனித்துவமான சிரிப்பு. தமிழ் சினிமாவில் சிரிப்பின் மூலம் பிரபலமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் குமரிமுத்து, இன்னொருவர் மதன் பாப்.

கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு அதே பெயரில் ஒரு மாமா இருந்திருக்கிறார். குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இவரை இவரது வீட்டில் மதன் என்று அழைத்திருக்கிறார்கள். இவரது தம்பி பாபுவுடன் சேர்ந்து இவர் தொடங்கிய இசைக்குழுவுக்கு மதன் - பாபு என்று பெயர் வைக்கப்பட்டதால் அதுவே இவரது பெயராக நிலைத்து விட்டது.

இளம் வயதிலேயே பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை கொண்டார். கோல் சண்டை, பானா, சூரி கத்தி போன்ற அரிய கலைகளையும் கற்றுக் கொண்ட மதன் பாப், மெட்ராஸ் சார்பட்டா பரம்பரையில் ஹெவி வெயிட் பாக்ஸராக இருந்திருக்கிறார். இதனை ஒருமுறை பா.ரஞ்சித்திடம் கூறியதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் மதன் பாப்.

இன்னொரு பக்கம் இசையில் ஆர்வம் கொண்ட அவர், கிடார், மிருதங்கள் உள்ளிட்ட இசைக் கருவிகளையும் கற்றுக் கொண்டிருக்கிறார். கற்றலில் ஆர்வமிகுதியால், புதிது புதிதாக எதையாவது கற்றுக் கொண்டே இருந்திருக்கிறார்.

கிடார் வாசிப்பதில் தேர்ச்சி அடைந்த மதன் பாப், தூர்தர்ஷன் சேனலில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வாசித்திருக்கிறார். இதுதவிர பல மேடை நாடகங்களுக்கும், சீரியல்களுக்கும் பின்னணியில் கிடார் வாசித்திருக்கிறார்.

இவரது தம்பியுடன் சேர்ந்து நடத்திய மதன் - பாபு இசைக்குழுவில் ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்டு பிளேயராக இருந்துள்ளார். ஆனால் மதன் பாப் இதை பற்றி எங்குமே பேசியதில்லை. ‘தெனாலி’ படத்தின் ரீ-ரிக்கார்டிங் பணியின்போது திரையில் மதன் பாபை பார்த்த ரஹ்மான், ‘இவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி. இவர் என் குரு’ என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறியிருக்கிறார்.

பாலுமகேந்திரா இயக்கிய ‘நீங்கள் கேட்டவை’ படத்தில் ‘அடியே மனம் நில்லுனா நிக்காதடீ’ பாடலில் தோன்றிய மதன் பாப், அதன் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கிய ‘வானமே எல்லை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அப்போதுதான் மதன் பாபு என்ற பெயரை மதன் பாப் என்று மாற்றினார் கே.பாலச்சந்தர்.

தொடர்ந்து ‘தேவர் மகன்’, ‘உழைப்பாளி’, ‘சதிலீலாவதி’ என சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய மதன் பாப், தமிழ், தெலுங்கு மலையாளம் என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான 'அசத்த போவது யாரு' நிகழ்ச்சியில் நடுவராக சின்னி ஜெயந்துடன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவரது மிமிக்ரி திறனும் வெளிப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து விலகி இருந்த அவர், தனக்கு புற்றுநோய் ஏற்பட்டது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லாமலே இருந்துவந்துள்ளார். இதற்காக நீண்டநாட்களாக சிகிச்சை பெற்றும் வந்திருக்கிறார். இந்தச் சூழலில், தனது 71-வது வயதில், மதன் பாப் உயிரிழந்தது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு பேட்டியில், “எந்த மாதிரியான பந்து வந்து விழுந்தால், உன்னால பேட்டிங் செய்ய முடியும் என எந்த பேட்ஸ்மேன் கிட்டயாவது கேட்போமா? எந்தப் பந்தாக இருந்தாலும் அதில் சிக்ஸர் அடிக்க வேண்டும், பவுண்டரி அடிக்க வேண்டும். அதுதான் சரி!” என்று மதன் பாப் கூறியிருந்தார்.

தனக்கு பிடித்த விஷயங்களை எந்தவித தயக்கமும் இன்றி கற்றுக்கொண்டே இருந்தவர் மதன் பாப். அது இசையோ, தற்காப்புக் கலையோ, நடிப்போ, அனைத்திலும் இறங்கி அதில் சிக்ஸர் அடித்து பார்த்திருக்கிறார் மதன் பாப்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in