‘எவ்ளோ நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது’ - அஜித் பட வசனத்தை மேற்கோள் காட்டிய ரஜினி! @ ‘கூலி’ படவிழா

‘எவ்ளோ நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது’ - அஜித் பட வசனத்தை மேற்கோள் காட்டிய ரஜினி! @ ‘கூலி’ படவிழா
Updated on
1 min read

சென்னை: ’கூலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: "நான் முதன்முதலில் லோகேஷிடம் கதை சொல்லுங்கள் என்று சொன்னபோது நான் ஒரு கமல் ஃபேன் என்றார். யாருடைய ரசிகர் என்று நான் கேட்டேனா? இந்த படத்தில் பன்ச் டயலாக் எல்லாம் இல்லை என அவர் மறைமுகமாக என்னிடம் சொல்கிறார்.

இது முழுக்க முழுக்க ஒரு வில்லன் கதாபாத்திரம் என்று என்னிடம் அவர் சொன்னார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்து அந்த கதைக்கு நிறைய நடிகர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார். என்னவோ இந்த கதையில் குறைவான நடிகர்கள் இருப்பது போல. முதலில் இந்த படத்துக்கு ‘தேவா’ என்று பெயர் வைத்தோம்.

இந்த படத்தில் சத்யராஜ் நடிப்பதாக லோகேஷ் என்னிடம் கூறியபோது முதலில் சத்யராஜ் நடிக்கிறாரா என்று கேளுங்கள் என்று சொன்னேன். ‘சிவாஜி’ படத்தில் நான் வாங்கும் சம்பளம் அளவுக்கு அவருக்கும் கொடுக்கிறோம் என்று சொன்னோம். ஆனால் அப்போதும் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். சத்யராஜுக்கும் எனக்கும் கருத்து ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர் மனதில் பட்டதை பேசக்கூடியவர். மனதில் பட்டதை பேசுபவர்களை நம்பிவிடலாம். ஆனால் உள்ளேயே வைத்திருப்பவர்களை நம்பமுடியாது.

‘மங்காத்தா’ படத்தில் அஜித்துக்கு வெங்கட் பிரபு ஒரு வசனம் எழுதியிருப்பார். ‘நானும் எவ்ளோ நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது’ என. அப்படி ஒரு கேரக்டரில் நாகர்ஜுனா நடித்திருக்கிறார்” இவ்வாறு ரஜினி பேசினார்.

ரஜினியின் 171-வது படமான இதில் சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர் கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14 வெளியாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in