சரண்டர்: திரை விமர்சனம்

சரண்டர்: திரை விமர்சனம்
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க ஒரு வாரமே இருக்கும் நிலையில், சென்னையின் திருமழிசை போலீஸ் ஸ்டேஷனில் பிரபலம் ஒருவர் சரண்டர் செய்த கைத்துப்பாக்கி காணாமல் போகிறது. வாக்காளர்களுக்கு முறை கேடாகப் பணப் பட்டுவாடா செய்ய உள்ளூர் தாதாவான கனகுவிடம் (சுஜித்) கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியும் காணாமல் போகிறது. ஒருபுறம், மாயமான கைத்துப்பாக்கியை கண்டுபிடிக்கும்படி பணிக்கப்படுகிறார் பயிற்சி எஸ்.ஐ ஆன புகழ் (தர்ஷன்). இன்னொரு பக்கம், கனகுவும் அவர் ஆட்களும் பணத்தைத் தேடுகிறார்கள். இரு தரப்பையும் இணைத்த புள்ளி எது? அவர்களுக்கிடையிலான முட்டலும் மோதலும் எதனால்? துப்பாக்கியும் பணமும் கிடைத்ததா? என்பது கதை.

சட்டத்தைக் காக்கும் போலீஸ்காரர்களும் அதை மதிக்காத நிழலுலகக் குற்றவாளிகளும் விரும்பியோ, விரும்பாமலோ சபிக்கப்பட்ட ஒரு மோதல் களத்தில் உழல்வதுதான் திரைக்கதையின் மையம். இந்த மோதலில் வழிந்தோடும் வன்முறையின் ரத்தத்தை மீறி, அன்பும் நேயமும் அறமும் வென்றதா, இல்லையா என்பதைப் பிடிமானம் மிகுந்த திரைக்கதை எழுத்தின் வழியே, நேர்த்தியான எமோஷனல் த்ரில்லராக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கவுதம் கணபதி. அதில் முழுமையான வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஒரு சிறந்த திரைக்கதையில் பெரிய, சிறிய கதாபாத்திரங்கள் எவ்வளவு முழுமையாக, வாழ்க்கைக்கு நெருக்கமாக எழுதப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்தே, அக்கதாபாத்திரங்களின் மீது பார்வையாளர்கள் தங்களுடைய அபிமானத்தைக் காட்டுவர். இதில், நேர்மையான போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் பெரியசாமி முதல், பொய்க்குற்றம் சுமத்தி அழைத்து வரப்படும் ஓர் ஏழைப் பெண்ணின் மகனான 5 வயதுச் சிறுவன் வரை பலரும் அவ்வளவு பாந்தமாக, முழுமையாக ஈர்க்கிறார்கள்.

சுவரொட்டி முதலாளியான சித்தப்பா (முனீஸ்காந்த்) திரைக்கதையின் கூடுதல் சுவாரஸியத்துக்காக எழுதப்பட்டிருக்கும் கதாபாத்திரம் என்றாலும் வெள்ளந்தித் தனத்தை வைத்தே சிரிக்க வைத்துவிடுகிறார்கள். நான்கு நாள் அவகாசத்துடன் வேகமாக நகரும் கதையில் இடம்பெற்றுள்ள திருப்பங்களை மதிக்கும் விதமாக கமர்ஷியல் விஷயங்களை திணிக்காதது, திரை அனுபவத்தைத் தரமானதாக மாற்றிவிடுகிறது.

புகழாக தர்ஷனும் பெரியசாமியாக லாலும் கச்சிதமாகப் பொருத்தி, தரமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். ஓர் அசலான தாதாவாக உணர வைத்துவிடுகிறார், சுஜித். இவர்களுடன் ஆரோள் டி.சங்கர் கவனிக்க வைக்கிறார். இரண்டு காட்சிகளே வந்துபோனாலும் மன்சூர் அலிகான் இயல்பு.

சிறந்த திரைக்கதை எழுத்து, பொருத்தமான நட்சத்திரத் தேர்வு, நேர்த்தியான காட்சியாக்கம், பொருத்தமான பின்னணி இசை, 'லைவ்’ ஆக உணர வைத்த ஒளிப்பதிவு ஆகியவற்றுக்கு அப்பால், 4 நாளில் நடக்கும் நிகழ்வுகளின் மூன்று தரப்பைத் தனது அட்டகாசமான படத்தொகுப்பால் ரேணு கோபால் தொகுத்த விதமே திரை அனுபவத்தை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுவிடுகிறது. உங்கள் நேரத்தைத் துணிந்து சரண்டர் செய்யலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in