மாரீசன் - திரை விமர்சனம்

மாரீசன் - திரை விமர்சனம்
Updated on
1 min read

சில்லறை திருட்டுகளுக்காகச் சிறைவாசம் அனுபவித்து வெளியே வரும் தயா (ஃபஹத் ஃபாசில்), ஒரு வீட்டுக்குள் திருட நுழைகிறான். அங்கே அடைபட்டுக் கிடக்கும் வேலாயுதத்தை (வடிவேலு) காப்பாற்றி, அவரைத் திருவண்ணாமலைக்குத் தன்னுடைய பைக்கில் அழைத்துச் செல்கிறான். வேலாயுதத்தின் வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் இருப்பதை வழியில் அறிந்துகொள்ளும் தயா, அதை அவரிடமிருந்து அபகரிக்கத் திட்டமிடுகிறான். ஆனால், வேலாயுதம் மறதி நோயால் அவதிப்படுவதால், அவருடைய ‘ஏடிஎம் பின்’ எண்ணை அவரது நினைவிலிருந்து மீட்பது சவாலாக இருக்கிறது. அதில் தயா வெற்றிபெற்றானா? உண்மையிலேயே வேலாயுதத்துக்கு மறதி நோய் இருந்ததா, இவர்களின் நெடுவழிப் பயணம் சென்றடைந்த இலக்கு என்ன என்பது கதை.

ஒரு திருடனின் அதிகபட்சத் தேவைகள், ஏமாற்றிவிட முடியும் என்ற நிலையிலிருக்கும் ஒருவருக்கு உதவுவதுபோல் நடிப்பது, ஒரு கட்டத்தில் நடிப்பைத் தாண்டி உண்மையான அன்பு ஊற்றெடுப்பது என தயா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம் யதார்த்தம். அதை இயல்பாக நடித்திருக்கிறார் ஃபஹத் ஃபாசில். வேலாயுதமாக வரும்வடிவேலுவின் கதாபாத்திரத்துடன், ‘மறதி நோய்’க்கும் அவருக்குமான உறவைப் பிணைத்த விதமும், அக்கதாபாத்திரத்தின் பூடகம் குறித்து தொடக்கத்திலேயே ஊகிக்க முடிந்தாலும் அதைத் தாண்டி அக்கதாபாத்திரம் பெண்கள், சிறார்கள் மீது கொண்டிருக்கும் ஓர் ஆணின் தாய்மை ஆகிய குணநலன்களைப் பொருத்திய பாங்கும் அபாரம்.

அக்கதாபாத்திரத்தின் சிக்கலான மைய முரணை நடிப்பில் கடத்த வேண்டும் என்பதற்காகவே, வடிவேலு தன்னுடைய முந்தைய உடல்மொழியை மறந்துவிட்டு, முற்றிலும் புதியதொரு நடிப்பைத் தந்திருக்கிறார். துணைக் கதாபாத்திரங்களில் சித்தாரா, விவேக் பிரசன்னா, கோவை சரளா ஆகியோர் கதையின் அடுத்தடுத்த நகர்தலுக்குத் தரும் இடையீடுகள் மிகவும் கச்சிதம்.படத்தில் பல கதாபாத்திரங்கள் வந்து போனாலும் ‘தயா- வேலாயுதம்’ இணையின் பயணமும் அதன் உள்ளாடிக் கிடக்கும் நோக்கங்களும் மெல்ல நகரும் படத்தை, விலகல் இல்லாமல் காணவைக்கின்றன. என்றாலும் படத்தின் நீளத்தில் 30 நிமிடங்களைத் துணிந்து குறைத்திருக்கலாம்.

ஒரு ‘ரோட் டிரிப்’ ஆக உருப்பெற்று நகரும்படத்தில், கலைச்செல்வன் சிவாஜி தனது ஒளிப்பதிவின் வழியாக முதன்மைக் கதாபாத்திரங்கள் பயணிக்கும் நிலப்பரப்பை நெருக்கமாக உணர வைக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் கலவையான உணர்வுத் தோரணங்களாக ஒலிக்கின்றன.வெளித்தோற்றத்தைக் கொண்டு எந்தவொரு மனிதரையும் எடைபோட்டு விடமுடியாது; ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மாயமான் போல வாழும் மற்றொரு மாரீசன் உண்டு என்பதை வி.கிருஷ்ண மூர்த்தியின் திரைக்கதை வழியே ‘எமோஷனல் த்ரில்ல’ராகத் தருவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சுதீஷ் குமார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in