‘கானல் நீர்’ ஆன சரத் சந்திர சட்டர்ஜியின் நாவல்

‘கானல் நீர்’ ஆன சரத் சந்திர சட்டர்ஜியின் நாவல்
Updated on
1 min read

ஆரம்பகால தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில், வங்க மொழி நாவல்கள் அதிகமாகத் திரைப்படங்களாகி இருக்கின்றன. அதிலும் சரத் சந்திர சட்டர்ஜியின் பல நாவல்கள் திரைப்படமாக்கப் பட்டிருக்கின்றன. அவர் நாவல்களில் இருந்து தமிழில் உருவான, ‘தேவதாஸ்’, ‘மணமாலை’ ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து அவருடைய ‘பரோதிதி’ என்ற நாவல், ‘கானல் நீர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. சட்டர்ஜி அதிகம் பிரபலமாகாத காலத்தில் பத்திரிகை ஒன்றில் தொடராக எழுதிய கதை இது. இந்தக் கதை அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

நடிகை, திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட பானுமதி, பல மறக்க முடியாத படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று இந்தக் ‘கானல் நீர்’. பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா, தனது பரணி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இந்தப் படத்தை இயக்கினார்.

தெலுங்கு, தமிழில் உருவான இதில், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஏ.நாகேஸ்வர ராவ் கதாநாயகனாக நடித்தார். சவுகார் ஜானகி, 'கல்கத்தா' விஸ்வநாதன், ‘ஜாவர்' சீதாராமன், எம்.ஆர்.சந்தானம், பி.எஸ்.ஞானம், சூரியகாந்தம் மோகனா, ஜெயராமன், 'அப்பா' கே.துரைசாமி, 'பேபி' காஞ்சனா, பி.ஆர்.பந்துலு ஆகியோர் நடித்தனர்.

ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவுக்குப் படிப்பைத் தொடர அனுமதி மறுக்கப்படுகிறது. அவர் வீட்டை விட்டு வெளியேறி, தனது அடை யாளத்தை மறைத்து மெட்ராஸ் வருகிறார். ஒரு செல்வந்தர், தனது இளைய மகளுக்கும் இளம் வயதில் விதவையாகிவிட்ட மூத்த மகளான பானுமதிக்கும் கல்வி கற்றுக்கொடுக்க நாகேஸ்வர ராவை நியமிக்கிறார். நேரில் பார்க்க வில்லை என்றாலும் பானுமதியும் நாகேஸ்வரராவும் காதலிக்கிறார்கள். பிறகு உறவினர்கள் சிலரின் விளையாட்டுத் தனத்தால் அவரை வெறுக்கும் சூழல் ஏற்படுகிறது பானுமதிக்கு. வேலையில் இருந்து நீக்குகிறார்.

இதையடுத்து ஒரு விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப் படும் நாகேஸ்வரராவ் பற்றி தெரிந்து, அவர் தந்தை ஜமீனுக்கு அழைத்துச் செல்கிறார். பானுமதியை மறக்க முடியாத அவர், பெற்றோருக்காக சவுகார் ஜானகியை மணக்கிறார். ஆனாலும் பானுமதியை மறக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் நாகேஸ்வர ராவ் ஜமீன்தார் என்பது பானுமதிக்கு தெரியவர, பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும்.

மாஸ்டர் வேணு இசை அமைத்தார். கண்ணதாசன், கு.மா.பாலசுப்பிரமணி யன் பாடல்கள் எழுதினர். ‘கண்ணில் தெரிந்தும் கைக்கு வராத கானல் நீருண்டு’, ‘வழி தேடி வந்தாய் புரியாமல் நின்றேன்’, ‘அம்மான் மகள் பாரு’, ‘உலகம் தெரியா பயிரே’ என பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

தெலுங்கில் 1961-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வெளியான இந்த படம், தமிழில் 1961-ம் ஆண்டு இதே நாளில் வெளியானது. படத்தில் பல சாதகமான அம்சங்கள் இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைச் சந்தித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in