கெவி: திரை விமர்சனம்

கெவி: திரை விமர்சனம்
Updated on
2 min read

கொடைக்கானலுக்குக் கீழே பல கிலோ மீட்டர்கள் தாழ்வான மலைக்கிராமம் வெள்ள கெவி. சாலை மற்றும் மருத்துவமனை வசதி இல்லாத அங்கே வாழும் மலைவாழ் மக்களில் மலையன் (ஆதவன்) துணிவும் உடலுரமும் மிக்கவன். அவனுடைய மனைவி மந்தாரை (ஷீலா) நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறார். உள்ளூர் போலீஸ் எஸ்.ஐ, மலையன் மீது மலையளவு வன்மத்தை வளர்த்துக்கொண்டு பழிவாங்கக் காத்திருக்கிறார். விடிந்தால் தேர்தல் என்கிற சூழ்நிலையில் காட்டுக்குள் எஸ்.ஐ குழுவிடம் சிக்கி மலையன் சின்னாபின்னமாக, இன்னொரு பக்கம், பிரசவ வலியால் துடிக்கும் மந்தாரையைத் தொட்டில் கட்டித் தூக்கிக் கொண்டு கிராம வாசிகள் மலையிறங்குகிறார்கள். கொலைவெறித் தாக்குதலில் சிக்கிய மலையன் உயிர் பிழைத்தாரா? மந்தாரையின் தலைப் பிரசவம் என்னவானது என்பது கதை.

ஓட்டுப் போட்டும் அடிப்படை வாழ்வாதார வசதியைப் பெற முடியாத சிக்கலான மலைக்கிராமம் ஒன்றின் வாழ்வா - சாவா போராட்டத்தை ரத்தமும் கண்ணீரும் வழிந்தோடும் சர்வைவல் த்ரில்லராகக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன். கெவி போன்ற சாலை வசதியற்ற மலைக் கிராமங்களுக்குப் பகலே பெரும் போராட்டமாக இருக்கும்போது, ஒவ்வொரு இரவும் அவர்களுக்கு எவ்வளவு பெரிய சவால் என்பதை உணர்த்தும் விதமாக, கதையின் இரண்டு முக்கிய நகர்வுகளை இரவில் அமைத்திருப்பது பார்வையாளர்களைப் பெரிய மன அழுத்தத்துக்குள் தள்ளி விடுகிறது.
ஓட்டுக்கேட்டு வரும் சிட்டிங் எம்.எல்.ஏ., அவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் போலீஸ் ஆகிய இரண்டு தரப்பும், அதிகாரமற்ற சாமானிய மக்களை எப்படிப் பார்க்கிறார்கள், அவர்கள் கேள்வி கேட்டால் எப்படி நடத்துவார்கள் என்பதைச் சித்தரித்த விதமும் அதிலிருந்து முளைக்கும் மைய முரணும் அழுத்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. உடல் பருமன் கொண்டவர்களின் உள்ளத்தைக் கவுரவம் செய்திருக்கும் துணைக் கதாபாத்திரம் ஒன்றை மிகச் சிக்கலான இடத்தில் இயல்பாகப் பொருத்தியதற்காகவே இயக்குநரைத் தனியாகப் பாராட்டலாம்.

மலையனாக வரும் ஆதவனுக்கு இது அறிமுகப்படம் என்பதை நம்ப முடியவில்லை. அவரது நடிப்பும் தாக்குதலுக்கு ஆளாகும்போது அவருக்குப் போடப்பட்ட நம்பகமான ஒப்பனையும் பார்வையாளர்களைப் பதற வைக்கின்றன. மலையனைப் பழிதீர்க்க உருமித் திரியும்எஸ்.ஐயாக வரும் சார்லஸ் வினோத், பார்வையாலேயே பயமுறுத்துகிறார். ஷீலா, பிரசவவலியில் அலறும் அலறல், நம் பய அமிலத்தைச் சுரக்கச் செய்கிறது. அவரைத் தவிர இவ்வளவு கனமான இக்கதாபாத்திரத்தை வேறு யார் ஏற்றிருந்தாலும் இவ்வளவு வலியை நடிப்பின் வழிக் கடத்தியிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஷீலாவின் தம்பி கடுக்காய் ஆக வரும் நடிகர், இரவு நெடுக அழுது தீர்த்து, ரத்த உறவு மீதான பிடிமானத்தை நடிப்பால் உணர வைக்கிறார்.

பார்வையாளர் அதிகமும் அறிந்திராத கதைக் களம், அதன் கொடிய இரவு ஆகியவற்றைத் தன்னுடைய ஒளிப்பதிவால் உயிரூட்டியிருக்கிறார் ஜெகன் ஜெயசூர்யா. அரிக்கேன் விளக்குகள், டார்ச் லைட்டுகள், தீப்பந்தம் ஆகியவற்றுடன் காட்சிச் சட்டகத்தில் கிடைக்கும் இயற்கை ஒளி என்னவோ அதை மட்டுமே வைத்துக் கொண்டு, கரடு முரடான மலை வாழிடத்தின், ஒற்றையடிப் பாதைகளின் வாழ்க்கையை, அங்கு வாழும் கதாபாத்திரங்கள் உயிர் பிழைக்க ஓடும் ஓட்டத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். தமிழ் சினிமா ஒரு திறமை வாய்ந்த புதுமுக ஒளிப்பதிவாளரைப் பெற்றிருக்கிறது.
மலையின் மடுவில் (பள்ளம்) வசிக்கும் மக்கள், காலனி ஆட்சி தொடங்கி இப்போது வரை எப்படிப்பட்ட நிர்ப்பந்தத்துடன் வாழப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள், வாழ்கிறார்கள் என்ற முக்கியமானப் பிரச்சினையை, ரத்தச் சாட்சிபோல் உணர்வு பொங்கப் பேசியிருக்கும் கெவி, உங்களைக் கலங்கடிக்கும் அசலான படைப்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in