

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் 'உத்தம வில்லன்' படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஜெயராம், இயக்குநர் பாலசந்தர், இயக்குநர் விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடிக்க ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
'விஸ்வரூபம் 2' படம் வெளிவரும் முன்பே இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கியதால், இப்படம் 'விஸ்வரூபம் 2'விற்கு பிறகு தான் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் 'உத்தம வில்லன்' படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்றது.
பெங்களூர், சென்னை, மத்திய பிரதேஷ் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். காந்தி ஜெயந்தி விடுமுறை தினங்களை கணக்கில் கொண்டு அச்சமயத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில், 'உத்தமவில்லன்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியிருக்கிறது. 'சிகரம் தொடு' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன் இதனை உறுதி செய்தார்.
படத்தின் இறுதிகட்டப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், இப்படத்தின் ட்ரெய்லர், இசை உள்ளிட்ட வேலைகள் செப்டம்பரில் நடைபெற இருக்கிறது.