‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல் - இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல் - இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்
Updated on
2 min read

‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன் இருவருமே மனக்கசப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.

இது தொடர்பாக வெற்றிமாறன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “‘வாடிவாசல்’ கதை எழுதுவதில் கொஞ்சம் தாமதம் ஆகிறது. மேலும், நடிகர்களின் பாதுகாப்பிற்காக தொழில்நுட்ப ரீதியில் கொஞ்சம் நேரம் ஆகிறது. அதற்காக காத்திருக்க வேண்டாம் என்று சிம்பு படத்தினை தொடங்குகிறேன். தாணு சார் தான் சிம்பு சாரை சந்திக்கிறீர்களா எனக் கேட்டார். உடனே சந்தித்துப் பேசினேன். அனைத்துமே சில மணி நேரங்களில் முடிந்துவிட்டது.

‘வடசென்னை 2’ என்று நிறைய வதந்திகள் இருக்கிறது. இது ‘வடசென்னை 2’ அல்ல. தனுஷ் நடிக்க அன்புவின் எழுச்சியாக மட்டுமே ‘வடசென்னை 2’ இருக்கும். ஆனால், சிம்பு நடிக்கும் கதை வடசென்னை உலகத்தில் இருக்கும். ‘வடசென்னை’ கதையில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்கள், இந்தக் கதைக்குள்ளும் இருக்கும். அதே காலகட்டத்தில் நடக்கும் கதையாக தான் இருக்கும்.

‘வடசென்னை’ படத்தின் அனைத்து உரிமைகளும் தனுஷிடம் தான் இருக்கிறது. அப்படம் சார்ந்து என்ன நடந்தாலும் அவரிடம் தான் உரிமை வாங்க வேண்டும். அதைச் சார்ந்து படம் எடுக்கும் போது, அவர் பணம் கேட்பதில் தவறே இல்லை. ஆனால், உண்மை என்னவென்றால் சிம்புவை சந்தித்து அனைத்தும் முடிவான அடுத்த நாள் தனுஷிடம் தொலைபேசியில் பேசினேன்.

“வடசென்னை உலகத்தில் உள்ள படமாகவும் அல்லது தனி படமாகவும் என்னால் பண்ண முடியும். அனைத்துமே உங்களை சார்ந்து இருக்கிறது” என்று அவரிடம் கேட்டேன்.

“உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை பண்ணுங்கள். ‘வடசென்னை’ உலகத்தில் பண்றது தான் சரியாக இருக்கும் என்று தோன்றினால் தாராளமாக பண்ணுங்கள். எனது அணியினரிடம் பேசிக் கொள்கிறேன், பணமெல்லாம் வேண்டாம். உடனே தடையில்லா சான்றிதழ் கொடுக்கிறேன்” என்று தான் தனுஷ் சொன்னார்.

சமீபமாக யூடியூப் வீடியோக்களை பார்க்கும் போது, சிலருடைய செய்திகள் ரொம்பவே காயப்படுத்தியது. என்னையும் தனுஷையும் வைத்து சிலர் பேசும் விஷயங்கள் பிடிக்கவில்லை. இதனாலேயே இந்த விளக்கத்தை அளிக்கிறேன். தனுஷுக்கும் எனக்குமான உறவு ஒரு படம் சார்ந்த விஷயத்தில் முடிந்துவிடுவது அல்ல. சிம்புவுடன் படம் பண்ணுகிறேன் என்று சொன்னவுடன், “கண்டிப்பாக உங்கள் இருவருக்குமே புதுசா இருக்கும். சிம்புவுக்குமே உங்களுடன் பணிபுரிவது புதுசா இருக்கும்” என்று தனுஷ் சொன்னார்.

சில நாட்களுக்கு முன்பு சிம்பு என்னை சந்தித்தார். அப்போது “தனுஷ் சம்பந்தப்பட்ட சில செய்திகள் எல்லாம் பார்க்கிறேனே. உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை பண்ணுங்கள் என்று சொன்னார். நீங்கள் என்ன சொன்னாலும் நான் ரெடி என்று சொல்லத்தான் வந்தேன்” என்றார்.

உங்களுக்கும் தனுஷுக்குமான நட்பு எந்தவிதத்திலும் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். இருவருமே நான் நானாக இருப்பதையே விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார் வெற்றிமாறன். >>வீடியோ லிங்க் https://youtu.be/93t5Dl4Njgc

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in