மார்கன்: திரை விமர்சனம்

மார்கன்: திரை விமர்சனம்
Updated on
1 min read

சென்னையில் முழுவதும் கருகிய நிலையில் இளம் பெண் ஒருவரின் உடல் கிடைக்கிறது. இதே முறையில், மும்பையில் தன்னுடைய மகளை இழந்த போலீஸ் அதிகாரி துருவ் (விஜய் ஆண்டனி), சென்னைக்கு வந்து விசாரணையில் இறங்குகிறார். விசாரணை வளையத்துக்குள் தமிழறிவு (அஜய் திஷான்) வருகிறார். ஆனால், அவருக்கு இருக்கும் அதீத ஞாபகசக்தி மூலம் சில துப்புகள் கிடைக்கின்றன. அதைத் தொடர்ந்து கதைக்குள் நிகழும் திருப்பங்களும் சம்பவங்களும்தான் கதை.

இளம் பெண்ணின் நிறத்தை மாற்றிக் கொலை செய்யும் தொடக்கக் காட்சிகள் மற்றும் விசாரணைகள் மூலம் கதைக்குள் இழுத்துச் செல்ல வைக்கிறார் இயக்குநர், லியோ ஜான் பால். ஆனால், அஜய் திஷான் விசாரணைக்குள் வருவதும் அவர் தொடர்பான காட்சிகளும் படத்தை மெதுவாகக் கடத்துகின்றன. அதே நேரத்தில் அவருடைய நீச்சல் திறமையைக் கொண்டு குற்றத்தின் முடிச்சுகளை அவிழ்க்க இயக்குநர் கையாண்டிருக்கும் விதம் ரசிக்க வைத்தாலும் சித்தர்களின் சக்தி என்று ஃபேன்டஸி ரகமாக திரைக்கதை நகரத் தொடங்கி விடுவது ரசனையை குறைக்கிறது.

போலீஸ் உயரதிகாரியாக இருக்கும் விஜய் ஆண்டனி, தொடக்கக் காட்சிகளில் சில விஷயங்களைக் கண்டுபிடிப்பதோடு சரி. பிறகு அவரே அஜய் திஷானின் ஞாபகசக்தி, நீச்சலை நம்பியே இருக்கிறார். கொலை நடந்த இடத்தில் ஞாபகமாக சில விஷயங்களைச் சொல்ல வைக்கும் வரை ஒகேதான். ஆனால், அதீத ஞாபகசக்தி, அபார நீச்சல் திறமை மூலம் பின்னோக்கிச் சென்று தடயத்தையும் கொலைகாரனையும் தேடுவது புதிதாக இருந்தாலும், அதைப் புரியும்படி எளிமையாகச் சொல்ல இயக்குநர் தவறிவிடுகிறார். என்றாலும் கொலைகாரன் யார் என்கிற திருப்பம் ரசிக்க வைக்கிறது. ஆனால், சைக்கோ கொலைகாரனின் கொலைகளுக்குச் சொல்லப்படும் பின்னணி தடுமாறுகிறது.

நாயகன் விஜய் ஆண்டனி, இறுக்கமான முகத்துடனும், இழப்பின் வலியோடும் விசாரணைக் காட்சிகளை மேற்கொள்கிறார். கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப நீண்ட வசனங்கள் இல்லாமலும் நடித்திருக்கிறார். இன்னொரு நாயகன் போல அஜய் திஷான் வருகிறார். தொடக்கத்தில் அவருடைய காட்சிகள் சோர்வடைய வைத்தாலும், பிறகு நேர்த்தியான நடிப்பின் மூலம் கவர்கிறார். படம் முழுவதும் வரும் ‘மகாநதி’ சங்கர், அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். சமுத்திரக்கனி, பிரிகிடா சாகாவின் கதாபாத்திரங்களுக்கும் இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். பிரித்திகா, வினோத் சாகர், ராமச்சந்திரன் துரைராஜ் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களின் தேர்வில் குறையில்லை.

ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்குரிய பின்னணி இசையை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார், விஜய் ஆண்டனி. எஸ். யுவாவின் ஒளிப்பதிவு இரவுக் காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறது. இயக்குநர் லியோ பால் ஜான் படத்தொகுப்பாளர் என்பதால், தேவையான இடங்களில் சரியாக வெட்டி, படத்தை கொஞ்சம் வேகமாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘மார்கன்’ இன்னும் ரசிக்க வைத்திருப்பான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in