DNA: திரை விமர்சனம்

DNA: திரை விமர்சனம்
Updated on
2 min read

காதல் தோல்வி காரணமாகப் போதைக்கு அடிமையாகி இருக்கிறார், ஆனந்த் (அதர்வா). சிறிய மனநோய் பிரச்சினையில் இருக்கும் நாயகி திவ்யாவுக்கு (நிமிஷா சஜயன்) திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இவர்களைக் குடும்பங்கள் புறக்கணித்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

அவர்களுக்குப் குழந்தைப் பிறக்கிறது. அந்தக் குழந்தையைக் கையில் வாங்கும் திவ்யா, அதை தனது குழந்தை இல்லை என்கிறார். அந்த குழந்தைக்கு என்ன ஆனது, திவ்யாவிடம் இருக்கும் குழந்தை யாருடையது என்பதை சொல்கிறது இந்த ‘டிஎன்ஏ’.

சமூகத்தில் இப்போது நடக்கிற குழந்தை கடத்தலின் பின்னணியில் அட்டகாசமான க்ரைம் த்ரில்லர் படத்தைத் தந்திருக்கிறார், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். அடுத்தது என்ன என்கிற பதற்றத்தையும் குற்றப் பின்னணியின் வலையையும் ஒன்றைத் தொட்டு ஒன்று எனச் செல்லும் திரைக்கதையும் கதையோடு நம்மை ஒன்ற வைக்கின்றன.

காதல் தோல்வி நாயகன், அவரை வெறுக்கும் குடும்பம், உதவும் நண்பர்கள் என்கிற பழகிய காட்சிகளில், படம் தொடங்கினாலும் மனநோய் பிரச்சினை கொண்ட ‘திவ்யாவைத் தான் கல்யாணம் பண்ணுவேன்’ என்று நாயகன் மேடையில் அறிவிக்கிற இடத்தில் இருந்து கதை விறுவிறுப்பாகிறது.

ஹீரோ ஆனந்தின் குடும்பம், நாயகி திவ்யாவின் குடும்பம் என முதல் பாதி, ஃபேமிலி டிராவாக சென்றாலும், இரண்டாம் பாதி விசாரணைக்குள்ளும் குழந்தை கடத்தல் பின்னணியின் தேடலுக்குள்ளும் சென்றுவிடுகிறது. நரபலி விஷயத்தைத் தெரிந்து கொண்டு ஹீரோவும் போலீஸ்காரரான பாலாஜி சக்திவேலும் தேடும் அந்த இருட்டு காட்சியின் முரட்டு ஆக்‌ஷன் ரசிக்க வைக்கிறது.

கட்டைப் பையுடன் மருத்துவமனையின் பிரசவ வார்டுக்குள் நுழையும் அந்த அப்பாவி பாட்டியின் நிஜமுகம் தெரியும்போது, பகீர் என்கிறது. சிசிடிவி காட்சிகளின் பின்னணியில் நடக்கும் விசாரணை, படத்தின் ‘மேக்கிங்’ உள்ளிட்ட விஷயங்கள் கவனிக்க வைக்கின்றன.

திவ்யா என்கிற மனநோய் கொண்டவராகவும் தாய்மை அடைந்த பெண்ணாகவும் தனது குழந்தை இன்னொருவருடையது என்று தெரிந்து அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்து அதன் ஞாபகத்திலேயே பேசிக்கொண்டிருக்கும்போதும் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார், நிமிஷா. ஆக்‌ஷன் காட்சிகளில் சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கும் அதர்வா, உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.

ஹீரோவுக்கு உதவும் பாலாஜி சக்திவேல், நாயகனின் நண்பன் ரமேஷ் திலக், ஹீரோவின் அப்பா சேத்தன், நாயகியின் அம்மா விஜி சந்திரசேகர், கட்டைப் பைகளில் குழந்தையைத் தூக்கிச்செல்லும் பாட்டி விஜயலட்சுமி, சுப்பிரமணிய சிவா ஆகிய துணை கதாபாத்திரங்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பார்த்திபனின் ஒளிப்பதிவு, ஒரு த்ரில்லர் படத்துக்கான பங்களிப்பைச் செய்திருக்கிறது. வேகத் தடைகளான பாடல்கள் கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. ஜிப்ரானின் பின்னணி இசை, காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறது. முதல் பாதி இழுப்பது போல சென்றாலும் சின்ன சின்ன லாஜிக் சிக்கல்களுடன் வரும் ‘டிஎன்ஏ’ வின் இரண்டாம் பாதி மனநிறைவைத் தருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in