“எனக்காக என் அப்பா பட்ட கஷ்டங்கள்!” - ‘குபேரா’ பட விழாவில் தனுஷ் உருக்கம்

“எனக்காக என் அப்பா பட்ட கஷ்டங்கள்!” - ‘குபேரா’ பட விழாவில் தனுஷ் உருக்கம்
Updated on
1 min read

ஹைதராபாத்: ‘குபேரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனது தந்தை குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ந்து பேசினார்.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள படம், 'குபேரா’. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 15) ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் தனுஷ் தொடர்பான காணொலி மேடையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய தனுஷ், “இந்த வீடியோவை பார்க்கும்போது நான் என் அப்பாவைத்தான் நினைத்துப் பார்க்கிறேன். அவர் பட்ட கஷ்டங்கள், அவர் வாங்கிட கடன்கள், அவர் சிந்திய வியர்வை, ரத்தம் அனைத்தும் நாங்க சாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

நான் சாதித்ததாக இந்த வீடியோவில் நீங்கள் பார்த்த அனைத்துக்கும் காரணம் என்னுடைய அப்பா மட்டுமே. என் அப்பா சாதித்த விஷயங்களுக்கு முன்னால் என்னுடைய சாதனைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர் ஒரு விவசாயி, ஒரு கிராமத்து ஆள். இன்று நான் இங்கே நிற்பதற்கு அவர்தான் காரணம். என் பேச்சை தொடங்கும் முன் இயக்குநர் சேகர் கம்முலாவுக்குதான் நன்றி கூற விரும்பினேன். ஆனால் இப்போது என் அப்பாவுக்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

’குபேரா’ எனது 51வது தமிழ்ப் படம். எனது இரண்டாவது தெலுங்கு படம். ‘சார்’ படத்துக்கு முன்பே சேகர் இப்படத்தின் கதையை என்னிடம் கூறினார். ஆனால் அதை எழுத நிறைய நாள் ஆனது. எண்ணிக்கையை பின் தொடரும் காலத்தில், அவர் தனது படங்களில் பட்டாம்பூச்சிகளை பின் தொடர்கிறார். அதை பார்க்கவே மிகவும் நிறைவாக இருக்கிறது. நீங்கள் மிகவும் பிடிவாதக்காரர் என்று ராஜமவுலி கூறினார். சரியான காரணங்களுக்காக பிடிவாதக்காரராக இருப்பதில் தவறில்லை. தேவா கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு நன்றி” என்று தனுஷ் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in