ரூ.40 கோடியை கடந்த ‘மாமன்’ வசூல் - ‘வெற்றி விழா இல்லை’ என்கிறார் சூரி!

ரூ.40 கோடியை கடந்த ‘மாமன்’ வசூல் - ‘வெற்றி விழா இல்லை’ என்கிறார் சூரி!
Updated on
1 min read

‘மாமன்’ படம் வெளியாகி 30 நாட்கள் ஆனதை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி. மே 16-ம் தேதி சூரி நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

தமிழகத்தில் ஒட்டுமொத்த வசூலில் ரூ.40 கோடியை கடந்து சாதனை படைத்தது. இதனால் படக்குழுவினர் அனைவருமே பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனிடையே ‘மாமன்’ வெளியாகி 30 நாட்கள் ஆகிவிட்டதை தொடர்ந்து சூரி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் சூரி, “இன்று நம்ம படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 30-வது நாளை எட்டியது! இந்த வெற்றி முழுக்க முழுக்க - உங்கள் அன்புக்கே! வார்த்தைகள் போதவில்லை. மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும். படம் முதல் நாளில் எளிமையாகத் தொடங்கியது. ஆனால், சில நாட்களிலேயே குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் வந்ததோடு, அது ஒரு பெரும் அலை போல பரவியது.

இன்று 30 நாட்கள் நிறைவடைந்துள்ள இந்த பயணம் - உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் சாத்தியமா? நிச்சயமாக இல்லை! இந்த படம் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படம் இல்லை. இது நம் வாழ்க்கையோடு இணைந்த உறவுகளின் தாக்கமும், சின்னச் சின்ன கனவுகளின் ஓசையும் கொண்ட கதை. அதனால் தான் பலர், ‘நம்ம வாழ்க்கையைப் போல தான்’, ‘மனதை தொட்ட படம்’” என்ற வார்த்தைகளால் பாராட்டினார்கள். அந்த ஒவ்வொரு வார்த்தையும் என் மனதை நெகிழச்செய்தது.

வெற்றி விழா நடத்தவில்லையா? இல்லை... ஆனால், ஒவ்வொரு நாளும் உங்கள் பாராட்டுகள், சமூக ஊடகப் பதிவுகள் - இதுவே நம்ம உண்மையான வெற்றிக் கொண்டாட்டம்! ‘மாமன்’ குழுவுக்கு, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திங்க் மியூசிக், மீடியா நண்பர்கள் - உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

உங்களின் அர்ப்பணிப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. உங்கள் அன்பே எனக்கு புதிய உற்சாகம்! அதையே தூண்டிச் சிறந்த படங்களை வழங்க முயற்சி தொடரும். என் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் - நீங்கள் இல்லாமல் நான் இல்லை” என்று தெரிவித்துள்ளார் சூரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in