Published : 11 Jun 2025 07:48 AM
Last Updated : 11 Jun 2025 07:48 AM
அதர்வா நடித்திருக்கும் ‘டிஎன்ஏ’, வரும் 20-ம் தேதி வெளியாகிறது. ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் நாயகியாக நடித்திருக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் பற்றி அதர்வாவிடம் பேசினோம்.
‘டிஎன்ஏ’ என்ன மாதிரியான கதையை பேசுது?
இது ஃபேமிலி ஆடியன்ஸை குறி வச்சு எடுத்திருக்கிற படம். சமூகத்துல புறக்கணிக்கப்படற இரண்டு பேர், ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கிறாங்க. அவங்க என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்றாங்க அப்படின்னு கதை போகும். அதாவது, நெகட்டிவ் பிளஸ் நெகட்டிவ், பாசிட்டிவ்-னு சொல்றதுதான் இந்தப் படத்தோட லைன். இன்னும் விளக்கமா சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன். கதை சொல்றதுலயும் அதை படமாக்கறதுலயும் சில இயக்குநர்கள் தனித்துவமா தெரிவாங்க. அதுல இயக்குநர் நெல்சன் வெங்கடேசனையும் சேர்த்துக்கலாம். ஷூட்டிங் நேரத்துல அது தெரியல. படமா பார்க்கும்போது அதை வேற மாதிரி கொண்டு வந்திருக்கிறார்.
முதன்முறையா இதுல ஒரு குழந்தைக்கு அப்பாவா நடிச்சிருக்கீங்க…
கதைக்கு தேவையா இருந்தது அப்படிங்கறதைத் தாண்டி எனக்கும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாமேன்னு தோணுச்சு. இந்தப் படத்துக்காக நிறைய குழந்தைகளோட நடிச்சதும் எனக்கு புதுமையான அனுபவம். வீட்டுல அக்கா குழந்தைகளை டீல் பண்ற விஷயங்களை வச்சு, அவங்களோட இயல்பா நடிச்சது சிறப்பா இருந்தது.
நிமிஷா சஜயன் சிறந்த நடிகை, அவங்களோட நடிச்சது பற்றி?
கண்டிப்பா. ‘செட்’ல நல்லா ‘பெர்ஃபாம்’ பண்ற ஒருத்தங்க இருந்தா, அது நமக்கே ஒரு எனர்ஜியை கொடுக்கும். நாமளும் நல்லா பண்ணணும்ங்கற ஆர்வத்தைத் தரும். நிமிஷா கூட நடிச்சதும் அப்படித்தான். படத்துல திவ்யாங்கற கேரக்டர்ல நிமிஷா அருமையா நடிச்சிருக்காங்க. அவங்க கேரக்டரும் பேசப்படும் விதமா இருக்கும்.
5 இசை அமைப்பாளர்கள், ஏன்?
படத்தை தொடங்கும் போதே ஜிப்ரான் பின்னணி இசையை பண்ணட்டும். பாடல்களுக்கு வெவ்வேறு மியூசிக் டைரக்டர்களை பார்க்கலாம்னு இயக்குநர் முடிவு பண்ணினார். அப்படித்தான் அவங்க வந்தாங்க. அஞ்சு மியூசிக் டைரக்டர்களும் வித்தியாசமான இசையை கொடுத்திருக்காங்க. பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பானதா இருக்கும்.
உங்க வீட்டுக்குள்ளேயே இன்னொரு ஹீரோ வந்துட்டார்…
நல்ல விஷயம்தானே. தம்பி ஆகாஷ் முரளி நல்ல சினிமா ரசனை உள்ளவர். வீட்டுல நடிகர்களா இல்லாம, ரசிகர்களா பொதுவான சினிமா விஷயங்களை பேசுவோம். சில படங்களை பார்த்துட்டு அதுபற்றி விவாதிப்போம்.
மல்டி ஸ்டார் படங்கள் இன்னைக்கு அதிகம் வருது. ‘பராசக்தி’ல நீங்களும் ஒருத்தரா இருக்கீங்க...
மல்டி ஸ்டார் படங்கள் இன்னைக்கு தவிர்க்க முடியாது. எல்லா மொழியிலயும் ‘மல்டி ஸ்டார்’ படங்கள்தான் உருவாகிட்டு இருக்கு. அதுமட்டுமில்லாம, டைரக்டர், பட டீம் யார்ங்கறதும் முக்கியம். சுதா கொங்கரா இயக்கத்துல நடிக்கிறது, என்னை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போகும்னு நினைக்கிறேன். ‘பராசக்தி’ வேற லெவல் படமா இருக்கும். அதை பத்தி அப்புறமா நிறைய பேசலாம்.
‘இதயம் முரளி’ எப்படி இருக்கும்?
ஆகாஷ் பாஸ்கரன், இயக்குநராகத்தான் என்கிட்ட கதை சொல்ல வந்தார். அப்ப இதுதான் டைட்டில்னு நாங்க எதையும் முடிவு பண்ணலை. அந்த தலைப்பு நிறைய ஹீரோக்கள்கிட்ட சுத்தி சுத்தி, கடைசியில எனக்கே வந்ததுல மகிழ்ச்சி. அப்பாவை அந்த பெயர்ல தான் அழைப்பாங்க. அவர் பெயர் கொண்ட டைட்டில்ல நடிக்கிறது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT