Published : 09 Jun 2025 05:48 PM
Last Updated : 09 Jun 2025 05:48 PM
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு, 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் நடத்தப்பட உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டது. 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர், செப்டம்பர் 10-ம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் பெற்ற டிக்கெட்டுடன் வரலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு வாகன நிறுத்த வசதியுடன் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் டிக்கெட் எடுத்திருந்த சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன், ஆகஸ்ட் 12-ம் தேதி முறையான முன்னறிவிப்பு செய்யாததாலும், செப்டம்பர் மாதம் நடந்த போது போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடியாததாலும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பித் தர கோரியும் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த புகாரை விசாரித்த ஆணையம், இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஏசிடிசி. நிறுவனம், 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாகவும், 5 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவாகவும் மொத்தம் 55 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதங்களில் மனுதாரர் அர்ஜுனுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT