குலமகள் ராதை - ‘உன்னைச் சொல்லி குற்றமில்லை, என்னைச் சொல்லி குற்றமில்லை...’

குலமகள் ராதை - ‘உன்னைச் சொல்லி குற்றமில்லை, என்னைச் சொல்லி குற்றமில்லை...’
Updated on
1 min read

எழுத்தாளர் அகிலன், கல்கியில் தொடராக எழுதிய ‘பாவை விளக்கு’ கதையை அதே பெயரில் சினிமாவாக இயக்கினார், ஏ.பி.நாகராஜன். சிவாஜி, பண்டரிபாய், குமாரி கமலா, சவுகார் ஜானகி, எம்.என்.ராஜம் நடிப்பில் அந்தப் படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே, அகிலன் எழுதிய ‘வாழ்வு எங்கே?’ நாவலையும் திரைப்படமாக்க, திருப்பூர் ஸ்பைடர் என்ற பனியன் நிறுவனம் அதன் உரிமையை பெற்றது. ஸ்பைடர் பிலிம்ஸ் மூலம் அதை ‘குலமகள் ராதை’ என்ற பெயரில் தயாரிக்க, அதையும் ஏ.பி.நாகராஜனே திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார்.

தவறான புரிதல் காரணமாக வீட்டையும் காதலி ராதையையும் விட்டு வெளியேறி, சர்க்கஸ் ஒன்றில் சேர்கிறார், அச்சக தொழிலாளியாக நாயகன் சந்திரன். அங்கு அவர் சர்க்கஸ் கலைஞரான லீலாவைக் காதலிக்கிறார். ஒரு நிகழ்ச்சியின் போது, ​​பார்வையாளராக வரும் காதலி ராதையைக் கண்டதும் தன்னை மறந்து சர்க்கஸின்போது கீழே விழுந்து விடுகிறார்.

பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அவருக்கு என்னவாகிறது? காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்று கதை செல்லும். சிவாஜி கணேசனுடன், லீலாவாக தேவிகாவும் ராதையாக சரோஜாதேவியும் நடித்தனர். மற்றும் சாரங்கபாணி, ஆர்.எஸ்.மனோகர், வி.கே.ராமசாமி, டி.கே.பகவதி, கண்ணாம்பா, மனோரமா என பலர் நடித்துள்ளனர்.

கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார். பி.சுசீலா, டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருந்தனர். அனைத்தும் முத்து முத்தான பாடல்கள். ‘ஆருயிரே மன்னவரே...’, 'இரவுக்கு ஆயிரம் கண்கள்...’, ‘கள்ளமலர் சிரிப்பிலே...’, ‘பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்...’, ‘சந்திரனை காணாமல் அல்லி முகம்..’, ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி..’, ‘உலகம் இதிலே அடங்குது, உண்மையும் பொய்யும் விளங்குது...’, ‘உன்னைச் சொல்லி குற்றமில்லை, என்னைச் சொல்லி குற்றமில்லை...’ என அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.

‘உன்னைச் சொல்லி குற்றமில்லை’ பாடல், காதல் சோகம் சுமந்தவர்களின் ‘பேவரைட்’ பாடலாக அப்போது மாறியிருந்தது. எக்காலத்துக்கும் பொருந்தும் பாடல் அது. அதே போல 'இரவுக்கு ஆயிரம் கண்கள்’ இப்போதும் பலரின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கிறது.

சிவாஜியும் தேவிகாவும் சில காட்சிகளில் சர்க்கஸில் பணியாற்றுபவர்களாக நடித்திருப்பார்கள். சர்க்கஸ் சாகசக் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. கலப்புத் திருமணத்தை மையமாகக் கொண்ட கதை இது. படம் தொடங்கி வெளியாவதற்கு சில காலம் தடைபட்டாலும் 1963-ம் ஆண்டு இதே நாளில் ரிலீஸாகி வெற்றி பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in