Last Updated : 05 Jun, 2025 02:12 PM

17  

Published : 05 Jun 2025 02:12 PM
Last Updated : 05 Jun 2025 02:12 PM

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

‘நாயகன்’ என்ற ஒரு க்ளாசிக் படம் வெளியாகி சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பே இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. பிறகு டைட்டில் டீசர், ட்ரெய்லர், சமூக வலைதளங்களில் ஹிட் அடித்த பாடல்கள் என இப்படத்துக்கு பெரிய ஓபனிங்கை கொடுத்தது. இந்த பெரும் எதிர்பார்ப்பை கமல் - மணிரத்னம் கூட்டணி பூர்த்தி செய்துள்ளதா?

டெல்லியில் கேங்ஸ்டராக இருக்கும் ரங்கராய சக்திவேலுக்கும் (கமல்ஹாசன்), போலீஸுக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் பேப்பர் போடும் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டு இறக்கிறார். இதனால் அவரது மகனான சிறுவன் அமரன் (சிலம்பரசன்) ஆதரவின்றி நிற்கிறார். அவருடைய தங்கை சந்திராவும் காணாமல் போகிறார். பின்னர் அமரனை தத்தெடுத்து தன் சொந்த மகன் போல வளர்க்கிறார். தன் அண்ணன் மாணிக்கத்தின் (நாசர்) மகளின் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்கிறார் சக்திவேல். இதனால் தன்னுடைய பொறுப்புகளை (?) அமரனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார்.

ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன பிறகு தன்னை விட மற்றவர்கள் அமரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சக்திவேலுக்கு நெருடுகிறது. தன் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலுக்கும் கூட அமரன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார். இது இருவருக்கும் இடையே மோதலை உருவாக்குகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பதே ‘தக் லைஃப்’ படத்தின் திரைக்கதை. (படத்தில் இடம்பெறும் சிறிய ஸ்பாய்லர்கள் இதில் அலசப்பட்டுள்ளதால் படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்ளவும்.)

சில நேரம் நாம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செல்லும் படங்கள் நம்மை மிகுந்த ஆச்சர்யத்துக்குள்ளாக்கி நமக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும். வேறு சில படங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் செல்லும் பார்வையாளர்களை ஏமாற்றி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதில் ‘தக் லைஃப்’ இரண்டாவது வகை. காரணம், கமல்ஹாசன் - மணிரத்னம் என்ற இந்திய சினிமாவின் இரு பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இருந்தும் இப்படத்தை ஓரளவுக்கு கூட பார்வையாளர்கள் ரசிக்கும்படி கொடுக்க முடியாமல் போனது பேரதிர்ச்சி.

படம் ஒரு ஃப்ளாஷ்பேக் உடன் தொடங்குகிறது. படத்தின் ஒரு சில நல்ல அம்சங்களில் இந்தக் காட்சியும் ஒன்று. கமலுக்கான டீஏஜிங் தொழில்நுட்பம் அசத்தலான ஆச்சர்யம். இதற்கு முன்பு வந்த படங்களில் இல்லாத நேர்த்தியும், துல்லியமும் இதில் இருந்தது. இளவயது சிம்புவுக்கும் கமலுக்கும் இடையிலான காட்சிகளும், பின்னணியில் ஒலிக்கும் ‘அஞ்சுவண்ண பூவே’ பாடலும் நன்று. ஆனால், இதன்பிறகு சமகாலத்துக்குப் படம் வந்ததும் திரைக்கதை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி தட்டையாக நகரத் தொடங்குகிறது.

அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. மணிரத்னம் படங்கள் என்றாலே வசனங்கள் மூலமாக கதையை சுவாரஸ்யமாக நகர்த்துவதில் வல்லவர் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவர். ஆனால், அதற்காக ‘போதும் போதும்’ என்று சொல்லும் அளவுக்கு எல்லா காட்சியையுமே வசனத்திலேயே நகர்த்தி இருக்கிறார். கமலுக்கும் சிம்புவுக்குமான பிணைப்பு, அதன் பிறகு இருவருக்குள்ளும் எழும் சின்ன ஈகோ, சிம்பு மீது கமலுக்கு ஏற்படும் பொறாமை, நாசருக்கும் கமலுக்கும் அப்படி என்ன பகை என எந்த காட்சியிலும் அழுத்தமோ, மெனக்கெடலோ இல்லை. போகிற போக்கில் வசனத்திலேயே அவரவர் தங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையை சொல்லிவிட்டு போகிறார்கள்.

த்ரிஷா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. த்ரிஷா வீட்டில் இருந்து கமல் தன் வீட்டுக்குச் செல்லும் ஒரு காட்சியில் முகத்தில் வெறுப்பை காட்டுகிறார் த்ரிஷா. அதன் பிறகு இரண்டாம் பாதி முழுக்க கமலை நினைத்து உருகுகிறார். உண்மையில் அந்த கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன, அவர் யார் என எதிலும் தெளிவில்லை. இதே கதைதான் அபிராமி - கமல் இடையிலும். கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்துவிட்டு வந்து கொஞ்சம் எமோஷனலாக பேசியதுமே விழுந்து விடுகிறார் அபிராமி.

திடீரென சம்பந்தமே இல்லாமல் நேபாளம் செல்கிறார் கமல். அங்கு இடைவேளை வைக்கவேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்ட ஒரு காட்சி. அடிபட்டு, குண்டடி வாங்கி, மலையிலிருந்து கீழே விழுந்து எதுவுமே ஆகாமல் மீண்டும் விழுந்து, பனிப்புயலில் இருந்து தப்பித்து… உஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. ஒருகணம் நாம் பார்த்துக் கொண்டிருப்பது மணிரத்னம் படம்தானா என்ற சந்தேகமும் பல இடங்களில் சற்று அதிகமாகவே வருகிறது.

நேபாளத்தில் இரண்டு வருடம் கமல் தற்காப்புக் கலைகள் கற்றுக் கொள்வதாக காட்டுகிறார்கள். (அதுவும் வசனத்திலேயே வந்துவிடுகிறது) அதற்காக போகும் இடங்களுக்கு எல்லாம் அந்த தற்காப்பு உடையையே அணிந்துதான் செல்ல வேண்டுமா? முதல் பாதியில் ரங்கராய சக்திவேலாக இருந்த கமல், இரண்டாம் பாதியில் ‘இந்தியன்’ தாத்தா மோடுக்கு மாறிவிடுகிறார். படத்தில் இருந்த வெகுசில நல்ல காட்சிகளில் ஒன்றாக கமலும் ஐஸ்வர்யா லட்சுமியும் பேசிக் கொள்ளும் காட்சியை சொல்லலாம்.

ஒரு படத்தின் திரைக்கதை சொதப்பிவிட்டால், அதில் இடம்பெறும் நல்ல விஷயங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் போய்விடும் என்பதற்கு இந்தப் படமே சரியான உதாரணம். கமலின் நடிப்பு, சிம்புவின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், ரஹ்மானின் பாடல்கள், ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு என பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தும் இவை எதுவும் நம்மை படத்துக்குள் இழுக்கவில்லை. இந்தப் படத்தில் எதற்காக ஜோஜு ஜார்ஜ், ‘மிர்சாபூர்’ அலி ஃபஸல், அசோக் செல்வன், சேத்தன் போன்ற நல்ல நடிகர்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.

வழக்கமாக நன்றாக சென்று கொண்டிருக்கும் படத்தில் பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர்களாக வருகின்றன என்று சொல்வோம். ஆனால், இங்கு ஏற்கெனவே தொங்கி துவண்டு போயிருக்கும் படத்தில் ஆங்காங்கே வரும் பாடல்கள்தான் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ‘ஜிங்குச்சா’, ‘அஞ்சுவண்ணப் பூவே’ பாடல்கள் சிறப்பு. சின்மயி வெர்ஷனா, தீ வெர்ஷனா என்ற ரசிகர்கள் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்த நிலையில், உங்களுக்கு இந்த இரண்டு பாடலுமே கிடையாது என்று அதை தூக்கி கடாசியிருக்கிறார் இயக்குநர். மற்றொரு வைரல் பாடலான ‘விண்வெளி நாயகா’ பாடலும் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

முன்பே குறிப்பிட்டத்தை போல கமல் - மணிரத்னம் என்ற இருபெரும் ஆளுமைகள் இருந்தும் கூட இப்படத்தை காப்பாற்ற முடியாமல் போனது சோகம். ‘க்ளாசிக்’ அந்தஸ்தை பெற்றுவிட்ட ‘நாயகன்’ அளவுக்கு இல்லையென்றாலும் கூட ஓரளவு ஜனரஞ்சகமான முறையில் ரசிகர்களை திருப்திபடுத்தி இருந்தால் படத்துக்கு செய்த பிரம்மாண்ட விளம்பரங்களுக்கு நியாயம் கிடைத்திருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x