கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைஃப்’ - ஓசூருக்கு படையெடுக்கும் கமலின் கன்னட ரசிகர்கள்!

கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைஃப்’ - ஓசூருக்கு படையெடுக்கும் கமலின் கன்னட ரசிகர்கள்!
Updated on
1 min read

ஓசூர்: கர்நாடகாவில் வெளியாகாத 'தக் லைஃப்’ திரைப்படத்தை காண ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடித்திருக்கும் 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகா தவிர உலகம் முழுவதும் இன்று (ஜூன் 5) வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், 'கன்னட மொழி தமிழில் இருந்து தோன்றியது' என கமல்ஹாசன் பேசியது கர்நாடக மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதால், அந்த மாநிலத்தில் மட்டும் இன்று இப்படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகி இருப்பதால், கர்நாடகா மாநிலத்தின் தும்கூர், மண்டியா, பெங்களூரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கமல் ரசிகர்கள் ஓசூருக்கு படையெடுத்துள்ளனர்.

ஓசூரில் உள்ள திரையரங்கில் கர்நாடகா மாநிலத்தவர்கள் வருகை தந்து பட்டாசு வெடித்து, டிஜே நிகழ்ச்சிகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கமலின் கட்- அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும் மற்றும் கற்பூரம் ஏற்றியும் உற்சாகமடைந்தனர்.

இது குறித்து கர்நாடக மாநில ரசிகர்கள் கூறும்போது, “கமலின் ‘தக்லைஃப்’ திரைப்படம் கர்நாடகா மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட இருந்தது. இதற்காக பல லட்சம் செலவு செய்து கட் அவுட் பேனர்கள் என தடபுடலான ஏற்பாடு செய்திருந்தோம்.

இந்நிலையில் கன்னட மொழி குறித்து கமல் பேச்சால் கர்நாடக மாநிலத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகவில்லை . இதனை எங்கள் மாநிலத்தில் அரசியல் ஆக்கிவிட்டனர். சினிமாவுக்கு தடை போடலாம் ஆனால் ரசிகர்களான எங்களுக்கு தடை போட முடியாது. அதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த கமல் ரசிகர்களும் ஓசூரில் படம் பார்க்க வந்துள்ளோம். இங்கு தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களை விட 80 சதவீதம் கர்நாடக மாநிலம் ரசிகர்கள் தான் அதிகமாக உள்ளனர்.” எனக் கூறினர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in