‘மனுஷி’ படத்தின் ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் குறித்து விளக்கம்: சென்சார் போர்டுக்கு ஐகோர்ட் உத்தரவு

‘மனுஷி’ படத்தின் ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் குறித்து விளக்கம்: சென்சார் போர்டுக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on
2 min read

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது. இதை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி, படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், “தணிக்கைச் சான்று மறுத்து உத்தரவு பிறப்பிக்கும் முன், தணிக்கை வாரியம் என்னுடைய தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கவில்லை. தணிக்கை வாரிய உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களை எனக்கு தெரிவிக்கவில்லை. பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக இருக்கிறேன். படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கக் கோரிய எனது விண்ணப்பத்தின் மீது விரிவான உத்தரவை பிறப்பிக்க திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்,” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வெற்றிமாறன் தரப்பில், “படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவில், எந்த காட்சிகள் எந்த வசனங்கள் ஆட்சேபனைக்குரியவை என்று குறிப்பிடவில்லை,” என தெரிவிக்கப்பட்டது. அப்போது தணிக்கை வாரியம் தரப்பில், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், “அரசு கொள்கைகளுக்கு அவதூறு விளைவிக்கும் வகையிலும், நாட்டின் நலனுக்கு விரோதமாகவும் காட்சிகள் உள்ளன. அவற்றை நீக்கினால், சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என குறிப்பிடாமல் எப்படி எடிட் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார். பின்னர், படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என குறிப்பிட்டு தெரிவித்தால் மட்டுமே அந்த காட்சிகளை மாற்றி அமைக்க முடியும். எனவே, அந்த காட்சிகள் மற்றும் வசனங்களை மனுதாரருக்கு தெரிவிப்பது குறித்து திரைப்பட தணிக்கை வாரியம் விளக்கம் அளிக்க வேண்டும், என உத்தரவிட்டார்.

மேலும், மனுதாரர்களுடன் திரைப்படத்தை பார்த்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்களை சுட்டிக் காட்டலாம் என்று யோசனை தெரிவித்த நீதிபதி, வெற்றிமாறனின் மனு மீதான விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in