Published : 04 Jun 2025 06:25 AM
Last Updated : 04 Jun 2025 06:25 AM
எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை, தினமணி கதிரில் எழுதிய தொடர்கதை ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’. இந்தக் கதை புத்தகமாக வந்தபிறகு அதே பெயரில் திரைப்படமாக இயக்கினார், எஸ்.பி.முத்துராமன். திரைக்கதை, வசனத்தை புஷ்பா தங்கதுரை எழுதினார். ரம்யா சினி ஆர்ட்ஸ் சார்பில் சங்கரன் தயாரித்தார். இதில் கமல்ஹாசன், சுஜாதா, விஜயகுமார், விஜயலட்சுமி, விஜயகீதா, திலக் என பலர் நடித்தனர். பாபு ஒளிப்பதிவு செய்தார்.
சுஜாதாவும், கமல்ஹாசனும் காதலர்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நிலையில் ஒரு மோதலில் கமல்ஹாசனுக்கு ஆறுவருட சிறைத் தண்டனை கிடைக்கிறது.
இது தெரியாத சுஜாதா, அவர் திரும்பி வராததால் வேறு வழியின்றி விஜயகுமாரைத் திருமணம் செய்துகொள்கிறார். பிறகு, சிறையில் இருந்து திரும்பும் கமல்ஹாசனுக்கு சுஜாதாவுக்குத் திருமணமான தகவல் தெரியவருகிறது.காதலியை மறக்க முடியாமல் தவிக்கும் கமல்ஹாசன், ‘ஒருநாள் மட்டும் தன்னுடன் மனைவியாக வாழ்வது போல நடி, வேறு எந்த தவறும் நடக்காது. அந்த நினைவிலேயே வாழ்நாளைக் கழித்துவிடுவேன்’ என்கிறார் சுஜாதாவிடம். அவர் அதற்குச் சம்மதிக்கிறார்.
அந்த ஒரு நாளில்அவர்கள் காதலர்களாக இருந்த நாட்களின் நினைவுகள் வருகின்றன. பிறகு என்ன நடக்கிறது என்று கதை போகும். ஆறுவருட சிறை வாசத்துக்குப் பிறகு கமல் ரயிலில் வருவதில் இருந்துதான் படம் தொடங்கும். விஜயகுமாருக்கு கவுரவ வேடம் மாதிரிதான். படத்தின் கதையை இயக்குநர் முத்துராமன், அப்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த விஜயகுமாரிடம் சொல்லும்போது, “இதுல எனக்குப் பெரிய ஸ்கோப் இல்லையே?” என்றார். “கிளைமாக்ஸ் உங்களிடம்தான் முடிகிறது. அது பெரிய பெயரை பெற்றுதரும்” என்று சொன்ன பிறகு சம்மதித்தார். படத்தில் அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
வி.தட்சிணாமூர்த்தி இசையில் கண்ணதாசன், இரா.பழனிச்சாமி, குமாரதேவன் ஆகியோர் பாடல்களை எழுதினர். மூன்று பாடல்கள்தான். ‘ஆண்டவன் இல்லா உலகமிது’, ‘முறுக்கு கை முறுக்கு’, ‘நல்ல மனம் வாழ்க’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. 1976-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படத்தின் தலைப்பு மட்டுமல்ல, கதையும் வித்தியாசமானதுதான் என்று அப்போது விமர்சகர்கள் பாராட்டினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT