பிக் பாஸ் 2: நாள் 23 - மீண்டும் வார்த்தையை விட்டு சர்ச்சையில் சிக்கிய பொன்னம்பலம்!

பிக் பாஸ் 2: நாள் 23 - மீண்டும் வார்த்தையை விட்டு சர்ச்சையில் சிக்கிய பொன்னம்பலம்!
Updated on
2 min read

ஏற்கெனவே ஏடாகூடமாக ஏதோ சொல்லி சர்ச்சையில் சிக்கிய பஞ்சாயத்தே இன்னும் புகைந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று மீண்டும் விவகாரமாக பேசி மாட்டிக் கொண்டார் பொன்னம்பலம்.

சிறையில் இருந்து வெளியே வந்த பொன்னம்பலம் அன்றைய இரவு தனது கட்டிலில் படுத்திருந்தார். அருகில் வைஷ்ணவியிடம் பேசிக் கொண்டிருந்த சென்றாயன் “ஒரு ஆண் நினைத்தால் எவ்வளவு கனமான பொருளாக இருந்தாலும் தூக்கி விடுவான். அது பெண்ணாக இருந்தாலும் சரி” என்று ஆண்களின் வீர பராக்கிரமங்களை (?) பற்றி பேசிக் கொண்டிருந்தார். (இதெல்லாம் ஒரு பெருமையா ராசா?)

பேசியவர் அதோடு விடாமல் அருகில் இருந்த பொன்னம்பலத்திடம் சென்று “என்னண்ணே நா சொல்றது சரிதானே?” என்று உசுப்பி விட்டார். அதற்கு பொன்னம்பலம் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் “பகலில் ஜெயிப்பேனான்னு தெரியாது.. ஆனா நைட் எஃபெக்ல நான்தான் ஜெயிப்பேன்” என்று அழுத்தம் திருத்தமாக 2 முறை கூறினார்.

உடனே வைஷ்ணவி “அண்ணே.. இப்படி பேசுறது தப்புண்ணே.. இப்படி பேசித்தான் ஏற்கெனவே ஒரு பெரிய பிரச்சனை ஆச்சு” என்று கண்டித்தார்.

அதற்கு “நான்  எதுவும் தப்பா பேசலையே..” என்று சமாளித்தார் பொன்னம்பலம். “(இது மட்டும் தமிழ் கலாசாரத்துல வருதா சார்?)

இந்த பஞ்சாயத்து அந்த நாள் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டது. இரவு பொன்னம்பலம் அப்படி பேசியதை வைஷ்ணவி மறுநாள் ஜனனியிடம் முறையிட்டார். ஜனனியோ அதெல்லாம் ஒரு விசயமா என்பது போல ’அவர் என்னிடம் சரியாகத்தான் நடந்து கொள்கிறார்” என்று கூறினார்.

அதோடு விடாமல் ஜனனி சென்றாயனிடம் இது பற்றி விசாரிக்க, அது பாலாஜி நித்யாவின் காதுகளுக்கும் எட்டியது.

இரவு இந்த விவகாரம் நடந்து கொண்டிருக்கும் அதை அரை தூக்கத்தில் அரைகுறையாக கவனித்த டேனியல் காலையில் வந்து ’என்ன நடந்தது’என்று வைஷ்ணவியிடம் விசாரித்தார். இப்படியாக இந்த விசயம் கிட்டத்தட்ட வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரிந்து விட்டது.

தான் சொன்னது தவறு என்று ஒப்புக்கொள்ளாமல் கடைசி வரை அதற்கு நியாயம் கற்பித்தார் பொன்னம்பலம். ’இனிமேல் இந்த வீட்டில் கெட்டவார்த்தையோ இரட்டை அர்த்த பேச்சுக்களோ வேண்டாம்’ என்று ஒரு வழியாக அந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரம்யா.

கடந்த ஞாயிறு அன்று கமலிடம் தமிழ் பண்பாட்டை காக்க வேண்டும், தமிழ் கலாசாரத்தை போற்ற வேண்டும் என்றெல்லாம் ஒப்பித்த பொன்னம்பலத்துக்கு பல கோடி மக்கள் பார்க்கும் ஊடகத்தில் இது போன்று பெண்களிடம் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவதும், காமெடி என்கிற பெயரில் மற்ற பாலினத்தவரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதும் தமிழ் கலாசாரமில்லை என்பதை வார இறுதியில் கமல் உணர்த்துவாரா?

(தொடரும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in