“5,000 கி.மீ பயணத்தில் கிட்டிய அனுபவம்...” - நடிகர் சூரி பகிர்வு

“5,000 கி.மீ பயணத்தில் கிட்டிய அனுபவம்...” - நடிகர் சூரி பகிர்வு
Updated on
1 min read

‘மாமன்’ இனி படம் மட்டும் இல்லை; இது நம் அனைவருடனும் பிணைந்த ஓர் உணர்வு என்று தெரிவித்துள்ளார் சூரி.

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. இப்படம் ரூ.30 கோடியை கடந்து தமிழகத்தில் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. இதனால் இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல லாபம் கிடைத்துள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்த தமிழகம் முழுக்க பயணம் செய்தார் சூரி.

தனது பயணம் வெற்றியாக மாறியிருப்பது குறித்து சூரி தனது எக்ஸ் தளத்தில், “5000 கி.மீ மேலாக பயணம் செய்துள்ளேன். ஆனால் எண்ணமுடியாத இதயங்களுடன் தான் நான் இணைந்துள்ளேன். கடந்த 23 நாட்களில், 2,00,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் ‘மாமன்’ படத்தின் ஒரு பகுதியாக இணைந்தனர்.

அந்தச் சந்திப்புகள் என் நெஞ்சில் மறக்க முடியாத நினைவுகளாகி விட்டன. ஒவ்வொரு நாளும் மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் மனதில் இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்வது என் உள்ளத்தை நெகிழச் செய்தது. இந்த படம் எண்களை நோக்கி எடுக்கப்படவில்லை; பல உயிர்களைத் தொட்டு, வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தவே இப்பயணம் ஆரம்பமானது.

இந்தப் படம் உங்கள் மனதில் இடம் பிடித்திருப்பதே எனக்குப் பெரிய வெற்றி. உங்கள் அன்பும் ஆதரவும் என் வாழ்க்கையை மாற்றிவிட்டன.
ஒருநாளும் சோர்வாகவில்லை, ஏனெனில் உங்கள் பிரியம் எனக்கு எப்போதும் ஊக்கமாய் இருந்தது. மிகுந்த நன்றி. ‘மாமன்’ இனி படம் மட்டும் இல்லை — இது நம் அனைவருடனும் பிணைந்த ஓர் உணர்வு. நான் என்றும் உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் கடமைப்பட்டவனாகவே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார் சூரி.

‘மாமன்’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூரி. இதன் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் விரைவில் துவங்கவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in