சினிமா விழாக்களுக்கு வருவது ஏன்? - சீமான் விளக்கம்

சினிமா விழாக்களுக்கு வருவது ஏன்? - சீமான் விளக்கம்
Updated on
1 min read

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து, இயக்கி நடித்துள்ள படம், ‘பரமசிவன் பாத்திமா'. விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபன் சக்கரவர்த்தி இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அவர் பேசும்போது, “ இசக்கி கார்வண்ணனின் இந்தப் படம் சிறப்பாக வரும் என்று நினைக்கிறேன். ஒரு பிரச்சினையை தொடப் பயந்து, பயந்து அதைச் சரி செய்ய முடியாமலேயே போய்விட்டது. அது சமூகத்தில் இருக்கிற பெரிய அவலம்தான். தனது மனச்சான்று வழிகாட்டுதலின்படி நடந்தவன்தான் இந்த உலகத்தில் மிகப்பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்திருக்கிறான். விவேகானந்தர், ‘எதற்காகவும் உண்மையை விட்டுக் கொடுத்துவிடாதே, ஆனால் உண்மைக்காக எதையும் விட்டுக் கொடு’ என்று கற்பிக்கிறார். மதம், மாறிக்கொள்ளக் கூடியது. மொழியும் இனமும் மாறிக் கொள்ள முடியாதது. மதத்தையும் தாண்டிய புனிதம் இருக்கிறது, அதுதான் மனிதம்.

என்னை, சினிமாவை விட்டு வேறு தளத்துக்குப் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். காதலித்த பெண் திருமணமாகி சென்றுவிட்டாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவது போலதான் நான் சினிமா விழாக்களுக்கு வருகிறேன். இரண்டையும் செய்ய வேண்டும் என்று ஆசைதான். இந்தப் படத்தின் இயக்குநரே திரையரங்கு கிடைக்குமா என்று பயந்து கொண்டிருக்கிறார். நான் எடுத்தால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். அதனால் படம் எடுப்பதை என் தம்பிகள் பார்த்துக் கொள்ளட்டும். இவ்வாறு சீமான் பேசினார். இயக்குநர்கள் பிரசாத் முருகேசன், சுகா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in