‘திருட்டு பதிவிறக்கம் உள்ளத்தை சிதைக்கிறது’ - நடிகர் சூரி வருத்தம்

‘திருட்டு பதிவிறக்கம் உள்ளத்தை சிதைக்கிறது’ - நடிகர் சூரி வருத்தம்
Updated on
1 min read

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘மாமன்’. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திரைப்படங்களைத் திருட்டு பதிவிறக்கம் செய்து பார்ப்பது உள்ளத்தைச் சிதைக்கிறது என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று. ஒவ்வொரு படத்துக்கு பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன. ஒரு படம் உருவாகிறது என்றால், அது ஒரு குழந்தை பிறப்பதைப் போல.

கதையிலிருந்து தொடங்கி, படப்பிடிப்பு, பின்னணி வேலை, தொகுப்பு, இசை, விளம்பரங்கள் என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்து மாறாத உறுதியுடன் கட்டியெழுப்பப்படுகிறது.

ஒரு படம் வென்றாலும், தோற்றாலும் அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கலந்து இருக்கின்றன. இவ்வளவு முயற்சிக்குப் பிறகு, சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாகப் பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அதைப் பெருமையாகப் பகிரும் போது, அது நம் உள்ளத்தைச் சிதைக்கிறது. தன்னலமில்லாத உழைப்பை மதிக்காமல், திருட்டுப் பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல; மனிதநேயத்தையும் கைவிடும் செயல். எனவே என் பணிவான வேண்டுகோள்:

திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள். திரைப்படங்களைச் சரியான வழியில் பார்த்து, அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் ஆதரவுதான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது. நாம் ஒவ்வொருவரும் மாற்றத்துக்கான பொறுப்புடன் செயல்பட்டால், திரையுலகம் இன்னும் உயரலாம். இவ்வாறு சூரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in