ஏஸ்: திரை விமர்சனம்

ஏஸ்: திரை விமர்சனம்
Updated on
1 min read

தனது பழைய அடையாளத்தை மறைத்து, மலேசியா வரும் போல்ட் கண்ணனுக்கு (விஜய் சேதுபதி) அறிவுக்கரசனின் (யோகிபாபு) அறிமுகம் கிடைத்து, அவர் வீட்டுக்குச் செல்கிறார். எதிர்வீட்டுப் பெண்ணான ருக்குவுக்கும் (ருக்மணி வசந்த்) போல்ட் கண்ணனுக்கும் காதல் மலர்கிறது. ருக்குவுக்கு வேலையைத் தக்கவைப்பதிலும் வீட்டை மீட்பதிலும் பிரச்சினை . அதற்காக போல்ட் கண்ணன் இரண்டு காரியங்களில் ஈடுபடுகிறார். அதனால் அவரை ஒரு பக்கம் வில்லன் கோஷ்டி, தேடி அலைகிறது. மறுபக்கம் மலேசிய போலீஸும் தேடுகிறது. இந்தப் பிரச்சினையிலிருந்து போல்ட் கண்ணன் மீண்டாரா, காதலியின் பிரச்சினை தீர்ந்ததா? என்பது கதை.

ஒருவருக்குப் பிரச்சினை என்றால் எந்த வழியிலாவது உதவி செய்ய வேண்டும் என்கிற கொள்கை உடைய நாயகனின் கதை இது. ஒன் லைன் ஈர்க்கும்படியாக இருந்தாலும், திரைக்கதையில் அதை சுவாரஸியமாகவும் ரசிக்கும்படியும் வழங்க இயக்குநர் ஆறுமுகக்குமார் மெனக்கெட்டிருக்கலாம்.

பழைய குற்ற விஷயங்களை மறந்துவிட்டு புதிய வாழ்க்கை வாழ்வதற்காக மலேசியா வரும் நாயகன், மீண்டும் பழைய அவதாரத்தையே எடுக்க நேர்கிறது. ஆனால், தனக்கு வேண்டியவர்களுக்கு எப்படியாவது உதவி செய்து, பிரச்சினையைத் தீர்க்க நினைக்கும் அவரின் பின்னணிக் கதையைக் கொஞ்சமாவது சொல்லியிருக்க வேண்டாமா?

நாயகிக்கு ஏற்படும் வேலை சார்ந்த பிரச்சினை, வீட்டை மீட்கும் பிரச்சினை இரண்டும் ஆழமாக இல்லை. முதல் அறிமுகத்தில் திருடனாக நினைத்து நாயகனைத் திட்டித் தீர்க்கிறார் நாயகி. பின்னர் நாயகன், கொள்ளையடித்து அவருடைய கடனை தீர்ப்பது முரண். மலேசியாவில் சட்ட விரோதமாக நடக்கும் சூதாட்டக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கி இருக்கிறார்கள். அதன் நீளம் சோதிக்க வைக்கிறது.

படம் முழுவதும் யோகிபாபு வந்தாலும் அவருடைய காமெடி, கதைக் களத்துக்கு உதவ மறுக்கிறது. இருந்தாலும் இரண்டாம் பாதி சற்று விறுவிறுப்பாக நகர்வது ஆறுதல்.

விஜய் சேதுபதி, இயக்குநர் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். அலட்டிக் கொள்ளாமல் வில்லன்களுடன் மோதுவது, விதவிதமாக ஐடியா போடுவது, அதைச் செயல்படுத்துவது என அவர் பாணியில் நடித்திருக்கிறார். ருக்மணி வசந்த், அழகாக நடித்திருக்கிறார். ஆனால், ஒரே மாதிரியான உடல்மொழி கொஞ்சம் பலவீனம். யோகிபாபு டெம்ப்ளேட் காமெடி செய்கிறார். கெட்ட போலீஸாக வரும் பப்லு பிருத்விராஜ், வில்லனாக வரும் அவினாஸ், திவ்யா பிள்ளை உள்ளிட்டவர்கள் தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையில் குறையில்லை. கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு மலேசியாவின் அழகை அள்ளி வந்திருக்கிறது. ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பில் நீளமான காட்சிகளைக் குறைத்திருக்கலாம். திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் ‘ஏஸ்’ஸுக்கு கூடுதல் மதிப்பு கிடைத்திருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in