ஆகக் கடவன: திரை விமர்சனம்

ஆகக் கடவன: திரை விமர்சனம்

Published on

மருந்தகம் ஒன்றில் பணியாற்றும் ஆதித்யா (ஆதிரன் சுரேஷ்), விக்கி (சி.ஆர். ராகுல்), புகழ் (ராஜசிவன்) மூவரும் நண்பர்கள். இவர்களுக்குத் தனியாக மருந்தகம் ஒன்றைத் தொடங்கி முன்னேற வேண்டும் என்பது ஆசை. அதற்காகக் கடன் வாங்கியும் நகைகள் மற்றும் இடத்தை விற்று ரூ.6 லட்சம் சேர்க்கிறார்கள். அந்த பணம் திருடு போய்விட, போலீஸில் புகார் செய்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது? அவர்களின் கனவை அடைய முடிந்ததா? அதற்கு என்ன செய்கிறார்கள்? என்பது இந்தப் படத்தின் பரபரக்கும் கதை.

மிகவும் எளிமையாகவும் அழுத்தமாகவும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை யதார்த்தமாகத் தந்திருக்கும் அறிமுக இயக்குநர் தர்மா, மேக்கிங்கில் ஆச்சரியப்படுத்துகிறார். பொதுவாக இதுபோன்ற த்ரில்லர் படங்களுக்கு, முன் பின்னாகச் செல்லும் நான் -லீனியர் கதை கூறும் முறையையும் இரண்டு மூன்று லேயர்களை வைத்தும் பெரும்பாலான இயக்குநர்கள் திரைக்கதை அமைப்பது வழக்கம். அப்படி ஏதுமின்றி நேரடியாகவே கதை சொல்லி, கடைசிவரை த்ரில் உணர்வைப் பார்வையாளர்களுக்குத் தருவதில் வெற்றி பெறுகிறது படம். அதற்கு உறுதுணையாக இருக்கிறது, சாந்தன் அன்பழகனின் பதற்றம் ஏற்படுத்தும் பின்னணி இசையும் கதையைத் தொந்தரவு செய்யாத, உறுத்தல் இல்லாத லியோ வி ராஜாவின் அழகான ஒளிப்பதிவும்.

குற்றப்பின்னணிக் கதைக்கான ‘மூடு' தொடக்கத்தில் இருந்து இறுதிவரை கதையோடு பயணிப்பது பலம். கதாநாயகனுக்குக் காதல் என்றோ, குடும்பப் பின்னணி என்றோ, கதையை விட்டு விலகாமல் செல்லும் திரைக்கதை பார்வையாளர்களை ஒன்ற வைக்கிறது. யாருக்கோ நாம் செய்யும் நல்ல செயல், நமக்குப் பலன் கொடுக்காமல் போகாது என்கிற பாசிட்டிவான ‘பிரபஞ்ச விதி'யை பேசும் படத்தின் முதல்பாதி, ஏதோ நடக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதியில் புதிர்கள் விடுபடும்போது ஆச்சரியம். அதே நேரம், சில இடங்களில் திரைக்கதைமெதுவாகச் செல்வதையும் ரிபீட் வசனங்களையும், 2-ம் பாதியில் சில காட்சிகளின் நீளத்தையும் குறைத்திருக்கலாம்.

நண்பர்களாக வரும் ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், ராஜசிவன், நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்திருக்கும் வின்சென்ட், சதிஷ்ராமதாஸ், மைக்கேல், பஞ்சர் கடை சிறுவன்என அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கிஇருக்கிறார்கள். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் முழுமையான த்ரில் அனுபவத்தை தருகிறது புதுமுகங்களின் இந்த ‘ஆகக் கடவன'.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in