

நடிகர் சங்க உறுப்பினர்கள் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் கார்த்தி தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கு திரையுலகினர் மீதான பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தற்போது தமிழ் திரையுலகினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார் ஸ்ரீரெட்டி. இதனால் தமிழ் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில், கார்த்தி நடித்திருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதற்காக தமிழகமெங்கும் பல்வேறு ஊர்களில் உள்ள திரையரங்குகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார் கார்த்தி. புதுக்கோட்டை சுற்றுப்பயணத்துக்கு இடையே பத்திரிகையாளர்களை சந்தித்தார் கார்த்தி. அப்போது ஸ்ரீரெட்டி விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ ஸ்ரீரெட்டி எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டி வருகிறார். அவரிடம் ஆதாரம் இருந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருப்பார்.
ஆதாரமில்லாமல் கூறும் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கமுடியாது. நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது அவர் மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், “குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளது பெருமைக்குரியது” என்றும் குறிப்பிட்டு இருக்கிறார் கார்த்தி