‘ஏஐ’-யை கண்டு பயப்படத் தேவையில்லை: நடிகர் கமல்ஹாசன் உறுதி
கமல்ஹாசனும் மணிரத்னமும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணைந்துள்ள படம், ‘தக் லைஃப்’. இதில் சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது: ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் இதில் மீண்டும் நடித்திருக்கிறேன். அப்போது இருந்ததை விட இருவருமே இப்போது அனுபவம் வாய்ந்தவர்களாக மாறியிருக்கிறோம். ‘நாயகன்’ படத்தில் நடித்த கமல்ஹாசனும் அதை இயக்கிய மணிரத்னமும் இப்போது இல்லை. ஒரே இடத்தில் நிற்காமல் நகர்ந்து வந்துவிட்டோம் என்பதே பெருமையாக இருக்கிறது. எந்த டைரக்ஷனுக்கு போக வேண்டும் என்று நினைத்தாரோ அந்த இடத்துக்கு மணிரத்னம் இப்போது வந்திருக்கிறார். நாங்கள் ஆரம்ப காலத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் எடுக்கப் போவதாகச் சொன்ன சினிமாவுக்கும் எடுத்த சினிமாவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ‘நாயகன்’ படத்தின் ஞாபகமே வராமல் இதை இயக்க வேண்டும் என்பதுதான் எங்கள் முயற்சி. அதை செய்திருக்கிறோம் என நினைக்கிறேன்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ளலாம் என்றுதான் அமெரிக்கா சென்றேன். அதுஎன்னைவிட, நம்மைவிட ரொம்ப பெரியது. அதைப் புரிந்துகொள்ளாமல் அதில் கை வைக்கக் கூடாது. அதைப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் அதிகமானவர்கள் இருக் கிறார்கள். ஆனால், சினிமாவை பொறுத்தவரை அது இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. அது பரந்த பகுதி. நம் அனைவரின் வாழ்க்கையிலும் ‘ஏஐ’ இருக்கப் போகிறது. அது நம்மை மிஞ்சிவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
நடிகர் சிலம்பரசன் கூறும்போது, “கமல் சாருடன் நடித்தபோது நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதை ஒன்று இரண்டு என சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்வேன். அவர் நடிக்கும் போது அதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்போது நானும் நடிக்க வேண்டும் என்பதை சில நேரங்களில் மறந்துவிடுவதுதான் பிரச்சினையாக இருக்கும். எங்களுக்குள் எந்த கருத்து மோதலும் இல்லை. எனது திருமணம் எப்போது
என்று கேட்கிறார்கள். சரியான நேரம் வரும்போது அது நடக்கும்” என்றார். நடிகைகள் அபிராமி, த்ரிஷா, நடிகர் அசோக் செல்வன் உடன் இருந்தனர்.
