ஜெயலலிதா அம்மனாக நடித்த ‘சக்தி லீலை’

ஜெயலலிதா அம்மனாக நடித்த ‘சக்தி லீலை’

Published on

புராணக் கதைகளை மையமாகக் கொண்ட படங்களுக்குத் தமிழ் சினிமாவில் எப்போதும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை என பல படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். இதில் பெரும்பாலான பக்திப் படங்களை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். இந்த வரிசையில் கொஞ்சம் லேட்டாக உருவான பக்தி படம், ‘சக்தி லீலை’.

டி.ஆர்.ராமண்ணா இயக்கியிருந்தார். பொதுவாக, பக்தி படங்கள் மல்டி ஸ்டார் படங்களாகத்தான் இருக்கும். இதிலும் அப்படித்தான். ஜெயலலிதா, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, கே.பி. சுந்தராம்பாள், உஷாராணி, உஷாநந்தினி, ஜெமினி கணேசன், சிவகுமார், ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளா, அசோகன், மனோரமா, வி.கே.ராமசாமி என பலர் நடித்தனர். இவ்வளவு முன்னணி நட்சத்திரங்கள் ஒரே படத்தில் நடித்தது, ‘சக்தி லீலை’யாகத்தான் இருக்கும். இதில் ஜெமினி கணேசன் சிவபெருமானாகவும் ஜெயலலிதா பெரிய பாளையத்து அம்மனாகவும் நடித்திருந்தனர். சிவகுமார், நாரதராக நடித்தார்.

டி.கே. ராமமூர்த்தி இசையில் பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார். ‘சக்தி வந்தாளடி’, ‘காலைப் பொழுதே’, ‘அம்பிகை நாடகம் அகிலம் முழுதும்’, ‘தன்னை வென்றவன் எவனும்’, ‘உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது’ உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. தலைப்பைப் போலவே இது பெண் தெய்வங்களின் சக்தியை பேசிய படம். ஜெமினி கணேசனின் சிவதாண்டவ காட்சியும் பெண் தெய்வமாக ஜெயலலிதா ஆடிய நடனமும் பெரிதும் ரசிக்கப்பட்டன. 1972-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in